இஸ்லாம்
இறையருள், உடல் ஆரோக்கியத்தை வழங்கும் நோன்பு

இறையருள், உடல் ஆரோக்கியத்தை வழங்கும் நோன்பு

Published On 2022-04-21 05:06 GMT   |   Update On 2022-04-21 05:06 GMT
பசியும், தாகமும் ஒரு நோன்பாளியை படாதபாடு படுத்தும்போதும், தமக்கு எட்டிய தொலைவில் உணவும், பானமும், துணைவியும் இருந்த போதிலும் அவற்றை தொடாமல், அனுபவிக்காமல் விலகிச் செல்வது அவரின் மனஉறுதியை பலப்படுத்துகிறது.
மனிதன் மனோ இச்சைகளுக்கு முன்பு பலவீனம் அடைந்து விடுகின்றான். எனவே, அவற்றை எதிர் கொண்டு, தம்மை பலப்படுத்திக் கொள்ள நான்கு வகையான அம்சங்கள் தேவை . அவை : 1) இறை நம்பிக்கையில் உறுதி, 2) மனவலிமை , 3) உறுதியான எண்ணம், 4) சாந்தம் போன்றவை ஆகும்.

ஒரு நோன்பாளி சூரியன் உதயமானதிலிருந்து அது அஸ்தமனம் ஆகும் வரைக்கும் உண்ணாமலிருப்பது, பருகாமலிருப்பது, மனோ இச்சைகளை கட்டுப்படுத்தி இருப்பது ஆகிய அனைத்தும் நோன்பாளியின் இறை நம்பிக்கையை பலப்படுத்துகிறது.

பசியும், தாகமும் ஒரு நோன்பாளியை படாதபாடு படுத்தும்போதும், தமக்கு எட்டிய தொலைவில் உணவும், பானமும், துணைவியும் இருந்த போதிலும் அவற்றை தொடாமல், அனுபவிக்காமல் விலகிச் செல்வது அவரின் மனஉறுதியை பலப்படுத்துகிறது.

அனைத்தையும் அனுபவிக்க ஏகபோக உரிமை இருந்தும், அவருக்கு அதன் மீது நாட்ட மில்லாமல் இருப்பது அவரின் உறுதியான எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

அவர் அனைத்தையும் தாங்கும்போது எதையும் தாங்கும் இதயமும், பொறுத்துக் கொள்ளும் சாந்தமும் அவருக்கு உண்டாகிவிடுகிறது. இந்த நான்கு வகையான செயல்களால் ஒரு நோன்பாளி பலம் பெற்று தமது நோன்புகளை தொடர முடிகிறது.

‘ஈமான் கொண்டோர்களே ! உங்களுக்கு முன்இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்’. (திருக்குர்ஆன் 2:183)

மேலும், நோன்பு தமது பசியின் கொடுமையை உணர்வதன் மூலம், ஏழைகளின் பசியையும் உணர்த்துகிறது. நமக்கு உணவளித்த இறை வனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்திட வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது.

நோன்பு நான்கு விதமான நோக்கங்களுக்காக நோற்கப்படுகிறது.

1) ஆன்மிக நோன்பு, 2) அரசியல் நோன்பு, 3) ஆரோக்கிய நோன்பு, 4) அழகிய நோன்பு

ஆன்மிக நோன்பு என்பது மதம் சார்ந்த கடமை . அது இறைவனின் ஆணைக்கிணங்க , அவனின் திருப்தியை பெற நோற்கப்படுகிறது. அரசியல் நோன்பு என்பது ஒருவர் தமது உரிமைக்குரலை அரசாங்கத்தின் பக்கம் தெரிவிக்க , அரசின் கவனத்தை பெ ற உண்ணாவிரதம் மேற்கொள்வது.

ஆரோக்கிய நோன்பு என்பது மருத்துவரின் அறிவுரையின்படி ஒரு சில உணவுகளை சில காலங்கள் வரைக்கும் தவிர்த்து கொள்ளும்படி அவரின் கூற்றை ஏற்று உண்ணாமல் இருப்பது, பத்தியம் இருப்பது. அழகிய நோன்பு என்பது உடல் எடை கூடாமல் இருக்க , அழகிய தோற்றம் பெற உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்வது.

இந்த நான்கு வகை காரணங்களுக்காக உண்ணாமல், பருகாமல் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆன்மிக நோன்பு நோற்கும் போது, கடமையும் நிறைவேறுகிறது. இறைவனின் திருப்தியும் கிடைத்துவிடுகிறது. இத்துடன் அனைத்துவித உடல்சார்ந்த நலன்களும், உலகம் சார்ந்த பயன்களும் கிடைத்து விடுகிறது.

‘ரமலானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

இறையச்சம், இறையருள், பாவமன்னிப்பு, உடல் ஆரோக்கியம் உள்பட ஏராளமான நற்பாக்கியங்களைத்தரும் ரமலான் நோன்பை இறைவன் வகுத்த வழியில் கடைப்பிடித்து நன்மைகள் பெறுவோம், ஆமீன்.

அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,
திருநெல்வேலி டவுண்.
Tags:    

Similar News