இஸ்லாம்
ரமலான் கற்றுத்தரும் படிப்பினைகள்

ரமலான் கற்றுத்தரும் படிப்பினைகள்

Update: 2022-05-03 04:35 GMT
இந்த ரமலானில் நாம் கற்றுக்கொண்ட மற்றொரு பாடம்- நேரம் தவறாமை. அதிகாலை ஸஹர் உணவை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
நோன்பு காலத்தில் இறைவனை அதிக ேநரம் தொழுது, நினைவுகூர்ந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். இந்த புனித ரமலான் காலத்தில் தான் ஜக்காத் என்னும் தர்மம் அளிப்பது அவசியமாகும். தங்களது வருமானத்தில் இருந்தும், சொத்துகளில் இருந்தும் குறிப்பிட்ட அளவை ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்திட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

“ரமலானின் மூலம் என்ன சிறப்பு இருக்கின்றது என்பதை என் சமூக மக்கள் அறிந்து கொண்டால், வருடம் முழுவதும் நோன்பாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று கூறுவார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இத்தகைய சிறப்பு மிக்க ரமலான் நோன்பை நாம் நிறைவு செய்திருக்கின்றோம். இந்த ரமலான் நமக்கு வழங்கிய படிப்பினைகள் என்ன? இந்த ரமலான் நோன்பின் மூலம் நாம் என்ன பாடங்கள் கற்றுக்கொண்டோம் என்பதை சிந்தித்து அதை மற்ற காலங்கள் முழுவதும் செயலாற்ற வேண்டும்.

இந்த ரமலான் நோன்பு மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்களில் குறிப்பிடத்தக்கது உணவு கட்டுப்பாடு. நோன்பு காலத்தில் பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும் இறையச்சத்துடன் கட்டுப்பாட்டுடன் இருந்தோம். இதன் மூலம் நமது உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடைந்தது.

இதுகுறித்து நபிகளார் கூறினார்கள், ‘நோன்பு வையுங்கள், சுகம் பெறுவீர்கள். அதிகாலை ஸஹர் உணவில் பரக்கத் உண்டு’ என்றார்கள்.

மற்ற காலங்களில் உணவு கட்டுப்பாடு எப்படி என்பதையும் நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள். பசித்தபின் சாப்பிட வேண்டும். பசி இருக்கும் போதே சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வயிற்றில் மூன்று பகுதியாக இடம் ஒதுக்க வேண்டும். ஒரு பகுதி உணவு, ஒரு பகுதி நீர், ஒரு பகுதி சுவாசிப்பதற்கு சுலபமாக காலியாக வைக்க வேண்டும்.

இந்த உணவு கட்டுப்பாடுகளை நாம் ரமலான் காலத்தில் மட்டுமல்ல மற்ற காலங்களிலும் கடைப்பிடித்து வந்தால் மனமும், உடலும் ஆரோக்கியம் பெறும்.

அடுத்து, இந்த ரமலானில் நாம் கற்றுக்கொண்ட மற்றொரு பாடம்- நேரம் தவறாமை. அதிகாலை ஸஹர் உணவை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் தான் நோன்பை திறக்கவேண்டும் என்பது ரமலானில் நாம் கற்றுக்கொண்ட பாடம். அதுபோல எந்தச் செயலையும் நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விடவேண்டும். இது நமக்கு நற்பலன்களை அள்ளித்தரும்.

நோன்பு வைத்திருந்த காலங்களில் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள உறுப்புகளில் எத்தனையோ பேணுதல் கிடைத்தது. பேச்சு குறைந்தது. பார்த்தல், கேட்டல், கரங்களின் செயல்பாடு என ஒட்டு மொத்த உறுப்புக்களும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டன. இனிவரும் காலங்களிலும் இது போன்று நடந்து கொள்ளப்பழகிக்கொள்ள வேண்டும்.

ரமலான் மாதம் முழுவதும் ஐந்து நேரத் தொழுகையையும் விடாமல் ஓடோடிச் சென்று தொழுவதையும் கண்டோம். அதுபோல மற்ற காலங்களிலும் ஐந்து நேரத்தொழுகையில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். கேட்போருக்கும், கேட்காதவருக்கும், ஏழை எளியவருக்கும் கொடுத்து உதவி செய்ய ஊக்கமளித்தது ரமலான். அதுபோல மற்றகாலங்களிலும் நம்மால் முடிந்த அளவு இரக்க சிந்தனையுடன் தர்மம் செய்திடவேண்டும்.

இதுபோல இன்னும் பல ரமலான்களை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவானாக ஆமீன்.

வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயீல் காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News