search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Islam"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது காஜி நியமனம் செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • பேராசிரியர் அல்லது ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது காஜி நியமனம் செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட காஜி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் மாவட்ட காஜி நியமன தேர்வுக்குழு இடம் பெற விண்ணப்பிப்பவர்கள், தனியர் ஆலிம் அல்லது பாசில் ஆக இருப்பதுடன் இஸ்லாம் மார்க்க கல்வியில் புலமைப்பெற்றவராகவும் அரபு கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் அல்லது ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

    இக்குறிப்பிடப்பட்ட தகுதியுடையவர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • தவறு செய்வது மனிதர்களின் இயல்பு என்று கூறலாம்.
    • இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான்

    பாவங்கள் எதுவுமே செய்யாத மனிதர்கள் யாரும் உண்டா?.

    இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் கள்ளம், கபடமில்லாத உள்ளத்துடன், பாவம் என்றால் என்னவென்றே தெரியாமல் தான் பிறக்கின்றன.

    பருவம் அடைந்த பிறகு, எது தவறு என்று அறிவு சுட்டிக்காட்டும் பொழுதும் கூட மனிதர்கள் ஏன் தவறுகள் செய்கிறார்கள்? முதல் காரணம், தான் செய்வது தவறுதான் என்பதை தவறு செய்பவர்கள் உணர்வதில்லை. ஷைத்தான் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறான். இது மிகவும் ஆபத்தானது.

    ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் பாவத்தைப் பற்றி கேட்கப்பட்டது. "பாவம் என்பது உன் மனம் அச்சுறுத்துவதும், மக்களிடம் அதை வெளியாக்குவதை நீ வெறுப்பதுவும் ஆகும்" என்று அண்ணல் அவர்கள் நவின்றார்கள்.

    பொது வெளியில் மற்றவர்கள் பார்க்கும் வண்ணம் பெரும்பாலான தவறுகள் நிகழ்வதில்லை. எவ்வளவு பாவங்கள் செய்தாலும், சில மனிதர்கள் எதுவுமே தெரியாத மாதிரி நல்லவர்கள் போல நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் இந்த பிரபஞ்சத்தில் இறைவனுக்கு தெரியாத ரகசியங்கள் உண்டோ? நம்முடைய ஒவ்வொரு செயலும், பேச்சும் அல்லாஹ்வின் கட்டளையின் படி அவரவர்களின் பதிவேட்டில் வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது.

    தஹ்லபா என்னும் சிறுவன் நற்பண்புகள் உடையவராகவும், மற்றவர்கள் மீது கண்ணியம் உடையவராகவும் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஏவும் பணிகளை பாக்கியமாகக் கருதி செய்து வருபவராகவும் இருந்தார். ஒரு முறை அண்ணலார் ஒரு வேலை காரணமாக தஹ்லபாவை வெளியில் அனுப்புகிறார்கள். போகும் வழியில் ஒரு வீட்டின் முன்பாக தொங்க விட்டிருந்த திரைச்சீலை காற்றில் விலகிய போது, உள்ளே ஒரு பெண்மணி குளித்துக் கொண்டிருந்த காட்சியை தற்செயலாகப் அவர் பார்க்க நேரிடுகிறது. உடனே தன் பார்வையைத் திருப்பிக் கொண்ட தஹ்லபா அவ்விடத்தை விட்டு பயந்து ஓடுகிறார். தவறு செய்து விட்டோமோ என்று மனம் பதறி வெகு தூரம் ஓடுகிறார். நபியவர்களை இனி எப்படி நேருக்கு நேர் சந்திப்பது என்று மனம் உடைந்து புலம்புகிறார். அவர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.

    தினமும் அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் விசாரிக்கிறார்கள். அவரைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வர உமர் (ரலி) அவர்கள் அனுப்பப்படுகிறார்கள். ஒரு வழியாக மலை அடிவாரம் ஒன்றில் அழுது, அழுது உடல் நலம் குன்றிய அவரைக் கண்டுபிடித்து தூக்கிக் கொண்டு வந்து அவருடைய வீட்டில் படுக்க வைக்கிறார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் தஹ்லபாவைப் பார்க்க வருகிறார்கள். படுக்கையில் இருந்து அவருடைய தலையைத் தூக்கி தன் மடியில் வைக்கிறார்கள். தஹ்லபா அழுது கொண்டே 'யா ரசூலுல்லாஹ் என்னுடைய தலையை கீழே கிடத்தி விடுங்கள். உங்களுடைய மடியில் தலை வைப்பதற்கு நான் அருகதை அற்றவன். நான் பெரிய பாவம் செய்து விட்டேன். அதனால் இறைவன் என்னைத் தண்டிப்பானோ என்று அச்சமாக இருக்கிறது' என்று புலம்புகிறார்.

    'உன்னுடைய பாவம் வானத்திற்கும், பூமிக்கும் இடைப்பட்ட அளவாக இருந்தாலும் அல்லாஹ் உன்னை நிச்சயம் மன்னிப்பான்' என்று நபி (ஸல்) அவர்கள் ஆறுதல் அளிக்கிறார்கள். மனம் வெம்பி அழுது கொண்டே இருக்கும் நிலையில் அவர் உயிர் பிரிகிறது. அவருடைய ஜனாஸாவை தூக்கிக் கொண்டு போகும் போது அண்ணல் அவர்கள் தங்கள் குதி கால்களைத் தூக்கிக் கொண்டு நடப்பதைப் பார்த்து உமர் (ரலி) அவர்கள் 'யா ரசூலுல்லாஹ் நடப்பதற்கு விசாலமாக இடம் இருக்கும் பொழுது ஏன் இவ்வாறு நடக்கிறீர்கள்?' என்று வியப்புடன் வினவுகிறார்கள்.

    'ஓ உமரே, தஹ்லபாவின் நல்லடக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான வானவர்கள் வந்துள்ளார்கள். அதனால் என் கால் பாதிக்க இடம் இல்லாமல் இவ்வாறு நடக்கிறேன்' என்று பதில் அளித்தார்கள்.

    எப்படிப்பட்ட இறையச்சம் தஹ்லபாவுடையது. அவர் தெரிந்து பாவம் எதுவும் செய்யவில்லை. பார்க்கக் கூடாததை தற்செயலாக கண்கள் பார்த்ததற்கே இறைவனின் தண்டனைக்கு பயந்து உயிரையே விட்ட அவரின் இறையச்சம் மகத்தானது. இது போன்ற இறையச்சம் நம்மிடம் உள்ளதா? யாரும் இல்லையென்ற தைரியத்தில் தவறான ஒளிப்பதிவுகளை தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் எந்தவித கூச்சமும், குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, பெரியவர்களும் பார்த்து ரசிக்கும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    தவறு செய்வது மனிதர்களின் இயல்பு என்று கூறலாம். ஆனால், தவறு செய்து, உடனடியாக அதை உணர்ந்து இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான், அவர்களை மன்னித்தும் விடுகிறான்.

    செய்த தவறுகளுக்கு எல்லா நிலைகளிலும் மன்னிப்பு கேட்கக் கூடியவர்களாக இருப்போம்! எல்லா விதமான பாவங்களில் இருந்தும் விலகி இருந்து நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பு பெறுவோமாக. நாம் தனிமையில் இருக்கும் போது நம்முடைய உள்ளத்தில் இறையச்சத்தோடு, மெய் நடுங்கி கண்ணீர் விட்டு இரு கரம் ஏந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால், நிச்சயமாக நமது பாவங்கள் மன்னிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்!

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், கானத்தூர், சென்னை.

    • நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும்.
    • உளத்தூய்மை குறித்தும் இந்தக் குர்ஆன் பேசுகிறது.

    மனிதனை நேர்வழிப்படுத்தி, இந்தப்பூமியில் அவன் எவ்வாறு வாழ வேண்டும், மறுமை வெற்றியை எவ்வாறு அடைவது என்பது குறித்து அழகிய முறையில் வழிகாட்டும் சிறந்த வேதம் திருக்குர்ஆன் மட்டுமே.

    அரபி மொழியில் இந்த நூல் இருந்தாலும் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இதே போன்ற ஒரு நூலைக் கொண்டு வாருங்கள் என்று அந்தக் குர் ஆனே சவால் விடுகிறது. அல்லது அந்த நூலில் எங்கேனும் ஒரு தவறையேனும் கண்டுபிடித்து விடுங்கள் என்றுகூட அறைகூவல் விடுகிறது. இந்த சவாலை சந்திக்கத்தான் யாராலும் முடியவில்லை. காரணம்- இது மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்டதல்ல, உண்மையில் இது இறைவேதமாகும்.

    திருக்குர்ஆனை விமர்சிப்பவர்களைப்பற்றி இறைவன் இவ்வாறு கூறுகின்றான்: "அவர்கள் குர்ஆனைப் பற்றி சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்". (திருக்குர்ஆன் 4:82)

    எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், திருக்குர் ஆன் விடுக்கும் ஒரே சவால் இதுதான்:

    "நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்). (திருக்குர்ஆன் 2:23)

    நூறு விழுக்காடு அது இறைவேதம் என்பதை திருக்குர்ஆன் (12:1) குறிப்பிடும் போது, "வேதக் கட்டளையாகும் இது" என்கிறது. மிக உயரிய லட்சியத்தின்பாலும் நேரான பாதையின்பாலும் மனித சமூகத்தை வழிநடத்துவதற்காக இந்தக் குர்ஆனை அல்லாஹ் இறக்கியருளினான், இதை விளக்கும் வசனங்களைக் காண்போம்.....

    "இது அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும்". (திருக்குர்ஆன் 41:2).

    "நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கின்றார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும். ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் முகம்மது நபிக்கு அல்லாஹ் இறக்கியருளிய அதே முறையில் அதன் வசனங்களை இன்றும் மக்கள் ஓதுகின்றார்கள். செவிமடுக்கின்றார்கள். மனப்பாடம் செய்கிறார்கள். புரிந்துகொள்கின்றார்கள்". (திருக்குர்ஆன் 41:41).

    "அல்லாஹ்விடமிருந்து பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளது". (திருக்குர்ஆன் 5:15)

    "அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன் (திருக்குர்ஆன்) மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்". (திருக்குர்ஆன் 5:16).

    "உண்மையில் இந்தக் குர்ஆன் முற்றிலும் நேரான வழியினைக் காண்பிக்கிறது. மேலும், இதனை ஏற்றுக்கொண்டு நற்செயல் செய்பவர்களுக்குத் திண்ணமாகப் பெரும் கூலி உண்டு என்று இது நற்செய்தி அறிவிக்கிறது". (திருக்குர்ஆன் 17:9)

    இந்தக் குர்ஆனுக்கு என்று நோக்கங்களும் இலக்குகளும் இருப்பதைப் போன்றே; சரியான கொள்கை, இறைத்தன்மை, தூதுத்துவம், நற்கூலி, மனிதன் குறித்த யதார்த்தம், அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கண்ணியம், அவனது உரிமைகள் குறித்த முக்கியத்துவம், அதிலும் குறிப்பாக பலவீனமானவர்களின் உரிமைகள் குறித்தெல்லாம் குர்ஆன் விரிவாகப் பேசுகிறது. மனிதன் இறைத் தொடர்பில் இருக்க வேண்டும், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அனைத்து விவகாரங்களிலும் அவனையே அஞ்ச வேண்டும் என்றும் இந்தக் குர்ஆன் தூண்டுகிறது.

    உளத்தூய்மை குறித்தும் இந்தக் குர்ஆன் பேசுகிறது. உள்ளம் தூய்மை பெற்றுவிட்டால் சமூகம் தூய்மை பெறும் என்றும், உள்ளம் மாசடைந்தால் சமூகம் மாசடையும் என்றும் இந்தக் குர்ஆன் கூறுகிறது.

    சமூகத்தின் கருவாக இருக்கும் குடும்ப அமைப்பு குறித்தும் குடும்பத்தின் தூணாக விளங்கும் பெண்ணிடம் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் இந்தக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

    அவ்வாறே சீர்திருத்தம் செய்யும் சமூக உருவாக்கம் குறித்தும் வலியுறுத்துகிறது. மனித குலத்திற்கான அமானிதம் அந்த சமூகத்திடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சாட்சியாளர்களாகத் திகழ வேண்டும். காரணம், ஏனைய மக்களுக்கு பயன் தருவதற்காகவும் அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காகவும் மட்டுமே இவர்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.

    ஒருவருக்கொருவர் அறிமுகமாகுங்கள், வெறுக்காதீர்கள், சகிப்புத்தன்மையைக் கடைபிடியுங்கள், `இனவாதம் வேண்டாம், நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள், தீமையிலும், பகைமையிலும் பரஸ்பரம் உதவாதீர்கள் என்றும் மனித உலகை இந்தக் குர்ஆன் அழைக்கிறது.

    மனப்பாடம் செய்தல், ஓதுதல், செவிமடுத்தல், வசனங்களை சிந்தித்தல், யோசித்தல், விளங்குதல், விளக்குதல் போன்றவற்றின் மூலம் இந்தக் குர்ஆனுடன் சிறந்த முறையில் நடந்துகொள்வது நம் மீது கடமையாகும். குர்ஆன் கூறும் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் அது இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையைத்தரும்.

    அப்ராஸ் அமீன், திருச்சி.

    • நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள்.
    • அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்

    எந்த மனிதனும் தன்னந்தனியாக வாழ்ந்துவிட முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து, இணைந்து, இசைந்து தான் வாழ வேண்டும். அப்படி வாழுகிறபோது மதம், இனம், மொழி, நிறம், கலை, கலாசாரம், சமயம், பண்பாடு போன்றவற்றை அவன் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது.

    இஸ்லாமின் முழு மூல வேதமான திருக்குர்ஆனிலும் சகோதர சமயங்களுடன் நல்லிணக்கம் பேணிய செய்திகள் பல உண்டு.

    "மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து தான் உற்பத்தி செய்தான். பின்பு அவ்விருவரிலிருந்தும் ஆண்கள், பெண்கள் என பலரையும் இப்பூமியில் பரப்பினான். ஆகவே, அத்தகைய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக் கேட்டுக்கொள்கின்றீர்கள். இன்னும் ரத்தக் கலப்பான தொப்புள் கொடி உறவினர்களிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 4:1)

    "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; ஆகவே,உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்கள் தான் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் சூழ்ந்து தெரிந்தவன்". (திருக்குர்ஆன் 49:13)

    இந்த இரண்டு வசனங்களும் மனிதன் எங்கிருந்து வந்தவன், அவன் எப்படிப்பட்டவன், அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவனைச் சுற்றியிருப்பவர்களும் அவனைப்போன்ற மனிதர்கள் தான் என்பதை வெகுஅழகாக எடுத்துக்கூறுகிறது. இறுதியாக நீங்கள் யாராக இருந்தாலும் நீங்களும் மனிதர் தான் என்பதை மட்டும் மறந்து விடாதீர் என்பதை சற்று அழுத்தமாகவே உணர்த்திக் காட்டுகிறது.

    தீய சக்திகளுக்கும், தீய சிந்தனைகளுக்கும் எப்போதுமே நாம் உடன்பட்டு விடக் கூடாது. நபிகள் நாயகமும் அவரது அருமைத் தோழர்களும் அவ்வாறு தான் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்கள்.

    "அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் புசிப்பவனாக இருப்பவன் உண்மையான இறைவிசுவாசியல்ல...!" என்று நபிகள் நாயகம் சொன்னது அனைத்து வகையான அண்டை வீட்டார்களுக்கும் பொருந்தும். இறைவன் புறத்தோற்றங்களையும், புறஉருவங்களையும் பார்ப்பதில்லை. மனிதன் தான் அநேக நேரங்களில் புறத்தோற்றங்களையும் புற உருவங்களையும் பார்க்கத் தொடங்கி விடுகின்றான்.

    "எவர் ஒரு ஆத்மாவை வாழவைக்கிறாரோ, அவர் அனைத்து ஆத்மாக்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார்" (திருக்குர்ஆன் 5:32) என்ற இறைவசனம் பொதுமைத் தன்மையுடன் தான் நம்மிடம் உரையாடுகிறது, இங்கு ஜாதி, மத பேதங்கள் அறவே கூறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

    இன்னும் ஒருபடி மேலே போய் "உங்களிடமிருந்து மற்றவர்கள் பெறும் நிம்மதியில் தான் உங்களது முழு நிம்மதியும் நிறைந்திருக்கிறது" என்கிறார்கள் நபிகள் நாயகம்.

    'இஸ்லாம்', 'முஸ்லிம்' என்ற அரபுச்சொல்லிற்கு கூட முறையே 'நிம்மதியைத் தருதல்' என்றும், 'நிம்மதியைத் தருபவர்' என்றும் தான் பொருள். எனவே நாம் நமது மார்க்கத்தின் நற்பெயருக்கு ஏற்ப நன்மக்களாக நடந்து கொள்வதில் தான் நமக்கான எதிர்காலம் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் மனதில் நன்கு நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

    வாருங்கள்... சமூக நல்லிணக்கத்தை உலகெங்கும் விதைத்திடுவோம்...!

    மவுலவி எஸ்.என். ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

    • அல்லாஹ் உறுதியாக கூறுகின்றான்.
    • மனிதனுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

    ஏக இறைவனான அல்லாஹ்வின் படைப்புகளில் சிறந்த படைப்பு மனித இனம். 'தன்னை மட்டும் வணங்க வேண்டும்' என்று மனிதனுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். மனித இனத்தை நேர்வழிப்படுத்த இறைவன் தூதர்களையும் அடையாளம் காட்டி இருக்கின்றான்.

    அந்த தூதர்கள், மனிதன் தற்போது வாழும் இம்மை வாழ்வை விட இறைவனின் அரியாசனத்தின் கீழ் வாழும் மறுமை வாழ்வின் சிறப்புகளை எடுத்துக்கூறியுள்ளனர். சிறப்பு மிகுந்த அந்த மறுமை வாழ்வுக்கு நம்மை எப்படி தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அல்லாஹ்வின் திருத்தூதர்கள் விளக்கி கூறியுள்ளனர்.

    மனிதன் இம்மையில் எப்படி வாழ வேண்டும் என்று இறைவன் கூறியதில் முக்கியமானது, உண்மையுடன் நடந்து கொள்வது. முதலில் தன்னை படைத்த இறைவனுக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். இறைவன் எப்படி எல்லாம் தன்னை வணங்க வேண்டும், எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கின்றானோ அதற்கு ஏற்ப மனிதன் உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    ஆனால் சபலங்களுக்கும், ஆசைகளுக்கும் அடிமையான மனித மனம் உண்மையில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறது. இந்த உலக வாழ்க்கை குறித்து திருமறையில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    "இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்". (திருக்குர்ஆன் 2:8).

    "இவ்வாறு கூறி அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. (திருக்குர்ஆன் 2:9).

    "மனிதர்களே! நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இந்த உலக வாழ்க்கை எல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும் தான். தவிர, உங்களுக்கிடையில் ஏற்படும் வீண்பெருமையும், பொருளிலும், சந்ததியிலும் அதிகரிக்க வேண்டும் என்ற வீண் எண்ணமும் தான். இதன் உதாரணமாவது: ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் நன்கு வளர்ந்து விவசாயிக்குக் களிப்பை உண்டுபண்ணிக் கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகி விடுவதைக் காண்கின்றான். இந்த உலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது. மறுமையிலோ அவர்களில் பலருக்குக் கொடிய வேதனையும், பலருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இந்த உலக வாழ்க்கை மனிதனை மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை". (திருக்குர்ஆன் 57:20).

    ஏக இறைவனான அல்லாஹ்வை உண்மையுடன் வணங்கி, அவன் காட்டிய வழியில் வாழ்ந்து வருபவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தில் இடம் உண்டு என்று அல்லாஹ் உறுதியாக கூறுகின்றான்.

    "எவர் ஈமான் (இறையச்சம்) கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் (அல்லாஹ்) சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்? (திருக்குர்ஆன் 4:122).

    இறைவன் காட்டிய வழியில் உண்மையுடன் நடந்து, அதற்கு பரிசாக இறைவன் தரும் சொர்க்க வாழ்வை நாம் அனைவரும் பெற உறுதிகொள்வோம். ஆமின்.

    பேராசிரியர் அ முகம்மது அப்துல் காதர், சென்னை.

    • தங்கள் மனைவிகளில் யாரையும் புறக்கணிக்கவில்லை.
    • தன்னால் இயன்ற அளவிற்கு மனைவிக்கு உதவிபுரிபவர்களாக இருந்தார்கள்.

    எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் அளப்பரிய சக்தி மிகுந்தவன். அவன் நினைத்தால் எந்த ஒரு உயிரினத்தையும் படைக்கும் வல்லமை உள்ளவன். அவன் 'ஆகுக' என்று சொன்னால் போதும், அவன் நினைத்த உயிரினம் படைக்கப்பட்டு விடும். அத்தனை வல்லமை மிக்க அல்லாஹ் படைத்தவற்றில் மிகவும் சிறப்பு மிக்க படைப்பு மனிதன்.

    இது குறித்து திருக்குர்ஆனில் (4:1) இறைவன் கூறுவதை பாருங்கள்:

    "மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் வெளிப்படுத்தி உலகில் பரவச்செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் தமக்குரிய உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் உங்கள் ரத்தக் கலப்புடைய உறவினர்களையும் ஆதரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்".

    மனிதனுக்கு வாழ்க்கை துணையாக படைக்கப்பட்ட அவனது மனைவி குறித்து அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

    "நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன". (திருக்குர்ஆன் 30:21).

    "உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முன்கூட்டியே நற்கருமங்களின் பலனை அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மறுமையில் அவனை சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:223).

    இறைவன் கூறிய இந்த வழியிலேயே இறைவனின் திருத்தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மண வாழ்க்கையும் அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்கள் பல திருமணங்களை செய்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். எந்த நிலையிலும் அவர்கள் தங்கள் மனைவிகளில் யாரையும் புறக்கணிக்கவில்லை. அவர்கள் அனைவரையும் சமமாக நடத்தினார்கள். அவர்களுக்குரிய மரியாதையை அளித்தார்கள்.

    இதுகுறித்த நபிமொழி வருமாறு:

    அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், "தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை நேரம் வந்து விட்டால் தொழுகைக்காக எழுந்து சென்று விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    இதுதான் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. தன்னுடைய மனைவியிடம் அன்போடும், அவர்களுடைய வேலையில் தானும் பங்கெடுத்துக் கொண்டார்கள். தன்னால் இயன்ற அளவிற்கு மனைவிக்கு உதவிபுரிபவர்களாக இருந்தார்கள். மனைவிக்கு எந்த சிரமத்தையும் கொடுக்கமாட்டார்கள். மனைவியோடு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். எந்த நிலையிலும் எந்த விதத் தவறான பேச்சையும் பேசமாட்டார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனைவியிடம் தான் ஒரு நபி என்ற மமதையோடு நடந்து கொள்ளமாட்டார்கள். நான் உங்களில் ஒரு மனிதர் என்ற எண்ணத்தில் தான் நடந்து கொள்வார்கள். தன்னுடைய மனைவிமார்களோடு விளையாட்டாக சில நேரங்களில் நடந்து கொள்வார்கள். மனைவிமார்களை சிரிக்க வைப்பார்கள். அன்போடும் பாசத்தோடும் நடந்து கொள்வார்கள். மனைவிமார்களை சந்தோசமாக வைத்துக் கொள்வார்கள். மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும், அதிலும் குறிப்பாக மனைவிமார்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையில் மனைவியருடன் அன்பும் இரக்கமும் ஏராளமாக இருந்தது.

    இது குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய கோபத்தையும், உன்னுடைய திருப்தியையும் நான் நன்றாக அறிவேன்" என்று கூறினார்கள். அதற்கு நான், "அதை எவ்வாறு தாங்கள் அறிந்துகொள்வீர்கள்? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நீ திருப்தியுடன் இருக்கும்போது பேசினால், 'ஆம்; முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய். நீ கோபமாய் இருக்கும் போது பேசினால், 'இல்லை; இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்" என்று சொன்னார்கள். நான், "ஆம் உண்மை தான். நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன் தங்கள் மீதன்று" என்று கூறினேன். (நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் கூர்ந்து கவனித்து எப்படி புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்.

    நாமும் திருக்குர்ஆன் கூறிய வழியிலும், நபிகள் வாழ்ந்து காட்டிய பாதையிலும் நமது திருமண வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மனைவியையும், குடும்பத்தையும் நேசித்து வாழ்வோம்.

    ஹிஜாஸ் யாஸ்மின், தென்காசி.

    • உலக வாழ்வு ஏற்றத்தாழ்வு நிறைந்தது.
    • கெட்ட செயல்கள் செய்பவன் உயர்ந்தவனாக கருதப்படுவான்.

    இஸ்லாத்தின் முக்கிய அடிப்படைகளில் ஒன்றாக மறுமை நாள், மறு உலக வாழ்வு விளங்குகிறது. தற்போது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. இந்த உலக வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், நன்மை-தீமைகளுக்கு ஏற்ப நமது மறுமை வாழ்வு அமையும் என்பதை திருக்குர்ஆனும், நபிமொழிகளும் விளக்குகின்றன. இந்த உலக வாழ்வில் அவன் சம்பாதித்த செல்வம், அவன் சுற்றம், மனைவி-மக்கள் என எதுவும் மறுமைநாளில் பயன்படாது. அவன் செய்த நற்செயல்கள் மட்டுமே அவனுக்கு அப்போது துணை நிற்கும் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

    இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    "அல்லாஹ்வே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியும் ஆவான்". (திருக்குர்ஆன் 1:4).

    "ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூருமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 3:30).

    "புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள், கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல், இவையே புண்ணியமாகும்; இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; வறுமை, இழப்பு போன்ற துன்பத்திலும், நோய் நொடிகள் போன்றவற்றின் கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள்". (திருக்குர்ஆன் 2:177)

    "யார் என்னுடைய (அல்லாஹ்வின்) உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும். (திருக்குர்ஆன் 20:124).

    அந்த அல்லாஹ் அளிக்கும் தீர்ப்பில் இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது. எனவே தான் மறு உலகம் இருக்கிறது என்பதிலும், அந்த மறுமை நாளில் நமது செயல்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் என்பதிலும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

    இந்த நம்பிக்கை வந்தால் உலக வாழ்வில் எந்த தவறு செய்யவும் மனிதன் பயப்படுவான், இறைவன் வகுத்த வழியில் தனது வாழ்வை நடத்த முயற்சி செய்வான்.

    மறு உலக வாழ்வு பற்றிய நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் அமைந்துள்ளது. அந்த நம்பிக்கை எவ்வளவு ஆழமாக மனித உள்ளத்தில் பதிந்திருக்கின்றதோ, அதற்கேற்ப ஒருவனது செயல்களில் மாற்றங்கள் நிகழும். இதனால் தான், தன் திருக்குர்ஆன் நெடுகிலும் அந்த நாளைக் குறிப்பிடுகின்றான். அதைப் பற்றி திருக்குர்ஆனில் இவ்வாறு எச்சரிக்கின்றான்.

    "நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த இறுதித்தீர்ப்பு நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து நல்வழிகளில் செலவு செய்யுங்கள்". (திருக்குர்ஆன் 2:254)

    "ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்கள் செய்கைகளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல அற்ப இன்பப்பொருளேயன்றி வேறில்லை". (திருக்குர்ஆன் 3:185)

    உலக வாழ்வு ஏற்றத்தாழ்வு நிறைந்தது. கடினமாக, உண்மையாக உழைப்பவன் குறைந்த ஊதியம்பெற்று கஷ்டப்படுவான். அடாவடித்தனம் செய்து வாழ்பவன் போற்றப்படுபவனாக இருப்பான். நல்ல நடத்தை உள்ளவன் தூற்றப்படுபவனாக, கெட்ட செயல்கள் செய்பவன் உயர்ந்தவனாக கருதப்படுவான்.

    தகுதியுள்ளவன் தரக்குறைவாகவும், தகுதியற்றவன் உயர்ந்தவனாகவும் வாழ்வான். கல்வி அறிவு இல்லாதவன் கண்ணியப்படுத்தப்படுபவன் ஆகவும், கல்வி அறிவில் சிறந்தவன் ஒதுக்கப்படுபவன் ஆகவும் இருப்பான். சுருக்கமாக சொல்வது என்றால் 'நல்லதுக்கு காலம் இல்லை' என்று நினைக்கும் அளவுக்கு உலக வாழ்க்கை காணப்படும்.

    இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும் என்றால் மறு உலகம் இருக்க வேண்டும். அதை ஒரு அதிபதி ஆட்சி செய்ய வேண்டும். அவன் நேர்மையானவனாக இருக்க வேண்டும். எது நீதியோ அதை நிலைநாட்டுபவனாக இருக்க வேண்டும்.

    அத்தகைய நீதிபதியாகத்தான் ஏக இறைவன் அல்லாஹ் இருக்கின்றான். தீர்ப்பு நாளின் அதிபதியாக இருக்கும் அவன் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். மனம் திருந்தி பாவ மன்னிப்பு கேட்டு, மீண்டும் பாவங்களை செய்யாமல் வாழ்ந்து, நற்செயல்களை அதிகம் செய்தால் தீர்ப்பு நாளில் இறைவனின் தண்டனையில் இருந்து நாம் தப்பிக்க முடியும். நரக நெருப்பில் இருந்து விடுதலை பெற இயலும்.

    புனிதமான சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்களாக வாழக்கூடிய நல்ல பாக்கியத்தை நமக்கும், உலக மக்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக, ஆமின்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

    • பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம்.
    • பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்.

    மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்த னர்.

    சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர் கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இன்று காலையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. மற்றும் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இன்று காலையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மைதானத்தில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். இதன்பின் ஆடு, மாடு குர்பானி கொடுத்தனர். மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருவொற்றியூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருவொற்றியூர் தேரடியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதே போன்று தாங்கல் ஜும்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு மாடுகளை குர்பானி கொடுத்தனர்.

    திருவொற்றியூர் எஸ். ஆர். கார்டன் பகுதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகையில் ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    கொளத்தூர் திரு.வி.நகர், குமரன் நகரில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

    இதேபோல் சென்னை பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், புரசைவாக்கம், அண்ணாநகர், ஐஸ் அவுஸ், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    • மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
    • இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும்.

    அரபி மாதங்களில் 12-வது நிறைவு மாதமாக இடம் பெறுவது துல்ஹஜ் மாதம் ஆகும். இந்த மாதத்தின் பத்தாம் நாளன்று உலக முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது 'பக்ரீத் பண்டிகை' ஆகும். 'பக்ரா' மற்றும் 'ஈத்' எனும் இரண்டு உருது வார்த்தைகளின் இணைப்புதான் 'பக்ரீத்' ஆகும். இதன் பொருள்- 'ஆட்டைப் பலியிட்டு கொண்டாடப்படும் பெருநாள்' என்பதாகும். மேலும் இதற்கு 'குர்பானி பெருநாள்' என்றும் பெயருண்டு.

    'குர்பானி' என்றால் 'தியாகம் செய்தல்' என்பது அர்த்தமாகும். குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இதற்கு காரணமாக ஒரு சரித்திர நிகழ்வும் உண்டு. நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது 86-ம் வயதில் குழந்தை வரம் கேட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தபோது அவர்களுக்கு இஸ்மாயீல் எனும் ஆண் குழந்தையை இறைவன் வழங்கினான். சில ஆண்டுகள் கழித்து அந்தக்குழந்தையை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதாக கனவு கண்டார்.

    இந்த இறை உத்தரவை செயல்படுத்திட குழந்தையை அறுத்துப் பலியிட துணிந்தார். அவரின் தியாகத்தை ஏற்றுக்கொண்ட இறைவன் குழந்தைக்கு பதிலாக பிராணி ஒன்றை பலியிட வழிகாட்டினார். இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதாவது: "ஆகவே அவ்விருவரும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் வழிபட்டு இப்ராகீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட முகங்குப்புறக் கிடத்தினார். அச்சமயம் நாம் 'இப்ராகீமே என அழைத்து உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும் நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்' என்றும் கூறி 'நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்' என்றும் கூறினோம்.

    ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம். அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்". (திருக்குர்ஆன் 37:103-108) 'நபியே நீர் உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக' (திருக்குர்ஆன் 108:3) இந்த தியாகத்திருநாள் குறித்த நபிமொழிகள் வருமாறு: 'துல்ஹஜ் 10-ம் நாளன்று ஆதமின் மகன் செய்யும் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும்.

    அவைகள் மறுமைநாளில் தமது கொம்புகளுடனும் ரோமங்களுடனும் கால்குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் ரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே இறைவனிடம் அவை சென்றடைகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி) 'குர்பானி கொடுப்பதினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என நபித்தோழர்கள் வினவிய போது 'அதன் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை உண்டு' என நபி (ஸல்) பதில் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் அர்க்கம் (ரலி) நூல்: அஹ்மது) இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கை மற்றும் செல்வங்கள் கால்நடைகள் ஆகிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திட தியாகப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.

    இதன்மூலம் இறை நெருக்கத்தையும் பெறமுடிகிறது. இறைவனுக்கு அடிபணிதலையும் காட்டமுடிகிறது. குர்பானி என்பது தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் அனைத்து சமுதாய ஏழை எளியோருக்கும் உணவு மற்றும் மாமிசங்களை வழங்கி உணவு வழங்குவதை விரிவுபடுத்தி பசியில்லாத சமுதாயத்தை உருவாக்குவதும் உறவுகளை ஆதரிப்பதும் விருந்தினர்களை உபசரிப்பதும் அண்டை அயலாரை அன்புடன் நடத்துவதும் நலிந்தோருக்கு தர்மம் செய்வதும் ஆகும்.

    குர்பானி என்பது நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாக வழிமுறையை நினைவு கூர்வதும் அதை கடைப்பிடிப்பதும் ஆகும். குர்பானி என்பது இறைவனின் கூற்றை உண்மைப்படுத்துவதும் இறைவிசுவாசத்தின் மீது உறுதியாக இருப்பதின் சாட்சியமும் ஆகும். இறைவன் பிரியப்படும் விதமாகவும் அவன் பொருந்திக் கொள்ளும் விதமாகவும் அவனது உத்தரவை வெகுவிரைவாக செயல்படுத்துவதும் தான் குர்பானியாகும்.


    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.



    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை-எளியோரின் பசிதீர்த்து கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்த நாளில், "ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு" என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக்கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.



    இத்தகைய உயரிய நெறியினை கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளை கொண்டாடி அன்பை பரிமாறிக்கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்தி கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவி; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு எனது உளங்கனிந்த பக்ரீத்திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    • இந்த பண்டிகை ஹஜ் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.
    • கேரளாவிலும் இன்று ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    முஸ்லீம்களின் முக்கிய விழாக்களில் பக்ரீத் பண்டி கையும் ஒன்று. இந்த பண்டிகை ஹஜ் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இது முஸ்லீம்களின் இறை தூதர் இப்ராகிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்ப டுகிறது.

    இந்தியாவில் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    நாகர்கோவில் இளங்கடை புதுதெரு அஷ்ரப் பள்ளிவாசலில் இன்று காலை நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    இதுபோல தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டிலும் ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். இதிலும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

    நாகர்கோவிலில் மற்றொரு தரப்பினர் நாளை பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை ஒட்டி நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கேரளாவிலும் இன்று ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். கேரளாவில் பக்ரீத் பண்டிகைக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை இன்னொரு பிரிவினர் இப்பண்டிகையினை கொண்டாடுகிறார்கள். இதற்காக கேரளாவில் நாளையும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    • ஹஜ் காரியங்களை மக்காவில் நிறைவேற்றிய பிறகு மதினாவுக்கும் செல்கின்றனர்.
    • நபிகள் நாயகம் அவர்களுக்கு சலாம் சொல்வார்கள்.

    'ஈதுல் அள்ஹா' என்று சொல்லப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது.உலகம் முழுவதும் பரவி வாழும் முஸ்லிம்களின் முக்கியமான இரண்டு பண்டிகைகளில் ஒன்று இந்த தியாகத்திருநாள்.

    4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைத்தூதர் இப்ராகிம் (அலை) அவர்களின் வாழ்வு முழுக்க முழுக்க தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர் மட்டுமின்றி அவரது குடும்பம் முழுவதுமே தியாகத்தின் திரு உருவங்களாக திகழ்ந்தனர் என்பது வரலாறு. தனது இளமைக் காலத்தில் தந்தையின் வழியில் கிடைக்கும் செல்வாக்கு மற்றும் வசதியான வாழ்க்கையை தியாகம் செய்தார். தந்தையையும் சமுதாய மக்களையும் சிந்திக்கத் தூண்டியதன் விளைவாக நாடு துறக்க நேர்ந்தது.

    தமது மனைவியையும் குழந்தையையும் பாலைவனத்தில் விட்டு வரும்படி இறைக்கட்டளை வந்தபோது அதை அப்படியே நிறைவேற்றினார். தம்மிடம் இருந்த உணவும், நீரும் தீர்ந்து போன நிலையில் குழந்தை பசியால் அழுதபோது, அன்னை ஹாஜரா அவர்கள் சபா மற்றும் மர்வா மலைக்குன்றுகளின் மீது ஏறி பயணக்கூட்டம் ஏதாவது வருகிறதா என்று தேடினார். அன்னை ஹாஜரா அவர்கள் மலைக்குன்றுகளில் தேடி களைத்து எதையும் காணாத நிலையில் திரும்பி வந்து தனது குழந்தையை பார்த்தபோது அதன் காலடியில் ஒரு ஊற்று ஏற்பட்டு தண்ணீர் பொங்கி பரவுவதை கண்டார். அந்த இடத்தைச் சுற்றி ஒரு பாத்தி கட்டி 'ஜம்ஜம்' என்று கூறினார்.

    வறண்ட பாலைவனத்தில் இறைவனின் அத்தாட்சியாக இன்றும் அந்த ஊற்று சுரந்து கொண்டிருக்கிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தினசரி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை தந்து கொண்டிருக்கும் ஜம் ஜம் ஊற்று இறைவனின் ஆற்றலை, வல்லமையை உலகுக்கு உணர்த்தக்கூடிய ஒரு சான்றாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    தனது முதிய வயதில் கிடைத்த மகனை, அவர் வளர்ந்து வரும் வேளையில், அறுத்து பலியிடுமாறு இறைவன் கனவின் மூலம் காட்டிய ஏவலை ஏற்று அதற்கும் தயாரானார். 'இறைவன் நரபலியை விரும்புவதில்லை என்று கூறி அங்கு ஓர் ஆட்டை இறக்கி வைத்து அதை அறுத்து பலியிடுமாறு' இறைவன் கூறினான். இன்றுவரை மட்டுமல்ல இனி உலக முடிவு நாள் வரை அந்த தியாகம் நினைவு கூரப்பட்டு கொண்டே இருக்கும். இப்ராகிம் (அலை) மற்றும் அவரது குடும்பத்தாரின் வாழ்வு முழுக்க தியாகச் சுடராய் பிரகாசிக்கிறது.

    இறைவனின் கட்டளைப்படி மக்காவில் உள்ள காபா ஆலயத்தை இப்ராகிம் (அலை) அவர்களும் அவர்களின் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களும் மறு நிர்மாணம் செய்தனர். ஹஜ்ஜுக்கு வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கும்படி இறைவன் கூறினான். அன்று விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இன்று வரையும் இன்னும் உலக முடிவு நாள் வரையும் உலகின் பல பாகங்களில் இருந்தும் முஸ்லிம்கள் அந்த இறைஇல்லத்தை நோக்கி சென்று ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்ற கூடியவர்களாய் இருக்கின்றனர்.

    ஹஜ் உடைய காரியங்களில் பெரும்பாலானவை இப்ராகிம் (அலை) மற்றும் அவரது குடும்பத்தாரை நினைவுபடுத்தக் கூடியவையாய் உள்ளன. உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து ஹஜ் செய்யக்கூடிய மக்கள் இனம், நிறம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒரே இடத்தில் ஒரே முழக்கத்தோடு ஒன்று கூடுகின்றனர்.

    அங்கு செல்லக் கூடியவர்கள் இறைவனின் இறுதி தூதரான முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றி, உலகம் முழுவதையும் படைத்த இறைவன் ஒருவனே என்ற ஓரிறைக் கொள்கையை ஏந்தியவர்களாக உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லக்கூடிய சமாதான தூதர்களாக விளங்குகின்றனர்.

    ஹஜ்ஜுக்கு செல்லக் கூடியவர்கள் ஹஜ் காரியங்களை மக்காவில் நிறைவேற்றிய பிறகு மதினாவுக்கும் செல்கின்றனர். மதினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உள்ளது. அந்த இடத்திற்கு செல்லக்கூடியவர்கள் நபிகள் நாயகம் அவர்களுக்கு சலாம் சொல்வார்கள். அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். "என்னுடைய அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக மாற்றி விடாதீர்கள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் இன்று வரை அவ்வாறே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    ஹஜ், உம்ரா சமயத்தில் ஆண்கள் அணியக்கூடிய தையலற்ற கீழாடை மற்றும் மேல்துண்டு ஆகிய இரண்டு துணிகள் இறைநம்பிக்கையாளரின் மரணத்திற்குப் பிறகு அணிவிக்கப்படக்கூடிய 'கபன்' என்ற உடையை நினைவுபடுத்தக் கூடியதாக உள்ளது. மேலும் அரபா மைதானத்தில் ஹாஜிகள் அனைவரும் ஒன்று கூடி இருக்கக்கூடிய காட்சி மறுமை நாளில் இறைவனின் முன் ஒன்று கூட்டப்படும் காட்சியை நினைவுபடுத்தக்கூடியதாகவும் இருக்கிறது.

    பி. செய்யது இப்ராகீம், சென்னை.

    • இறைவன் மனிதர்களுக்கு தனது அருட்கொடைகளை வழங்கினான்.
    • இறைவன் வகுத்த வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

    இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் அள்ளிக்கொடுப்பதே கொடைத்தன்மை ஆகும். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கொடுக்கும் தன்மை மனிதனுக்கு வளர்ந்து வருகிறது. இதற்கு ஆரம்பம் ஏக இறைவன் தான். இறைவன் மனிதர்களுக்கு தனது அருட்கொடைகளை வழங்கினான். இதன் மூலம் மனிதனின் வாழ்வு செழித்தது.

    மனித வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான தேவைகளாக உணவு, உடை, ஆரோக்கியம், வாழ்க்கைக்கு தேவையான வசதிகள், போதும் என்ற மனம் ஆகியவை கருதப்படுகிறது. மிக குறைவான வசதி வாய்ப்புகளிலேயே மனிதன் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும். ஆனால் ஆசையால் தூண்டப்பட்ட மனிதன் பணத்தை தேடியும், உடல் சுகத்தை தேடியும், பதவி, புகழைத்தேடியும் அலைகின்றான். இந்த தேடலில் இறைவனை மறந்து, அவன் வகுத்த வழியில் இருந்து தவறி நடக்கத்தொடங்குகின்றான். இதனால் நிம்மதி இழந்து விடுகின்றான்.

    இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளே போதும் என்ற மனதுடன் வாழ்ந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். இறைவன் வகுத்த வழியிலும், அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய வழியிலும் நடந்து வந்தால் போதும், எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும் அதை தாங்கி நிற்கும் வலிமையையும், நிம்மதியையும் இறைவன் நமக்குத்தருவான்.

    இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடைகள் குறித்து திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் ஏராளம் உள்ளன. இறைவன் தரும் அருட்கொடைகளை நாம் பரிபூரணமாக பெற என்ன செய்ய வேண்டும் என்பதும் திருக்குர்ஆனில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்". (திருக்குர்ஆன் 8:29).

    முதல்கட்டமாக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்தால் நமக்கு கிடைக்கும் முக்கியமான அருட்கொடை- நன்மை, தீமைகளை பிரித்தறிந்து கொள்ளும் ஞானம், அதன் மூலம் கிடைக்கும் நேர்வழி ஆகும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொண்டால் தான் மனிதனின் செயல்கள் நன்மையை நோக்கி அமையும். அப்போது தான் இறைவனின் அருட்கொடையான பாவ மன்னிப்பும் சொர்க்கமும் அவனுக்கு கிடைக்கும்.

    இதையே இந்த திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    "உண்மையில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (அதாவது, இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொண்டு) நற் செயல்கள் புரிந்து கொண்டிருந்தார்களோ அவர்களை, அவர்களின் (ஈமான்) நம்பிக்கையின் காரணத்தால் அவர்களுடைய இறைவன் நேர்வழியில் செலுத்துவான். அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில், அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (திருக்குர்ஆன் 10:9).

    "மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது".

    "(நபியே) நீர் கூறும்: "அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும் அருளைக் கொண்டும் இதனை இறக்கியுள்ளான். இதனைக் குறித்து மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும்விட இது சிறந்ததாகும்" (திருக்குர்ஆன் 10:57-58).

    இன்று வாழ்வில் நாம் அனுபவித்து மகிழும் அனைத்து சுகங்களும், வசதிகளும், கருவிகளும், வாகனங்களும் இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகள் தான். அந்த அருட்கொடைகள் எண்ணில் அடங்காதவை. இதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இறைவனின் கட்டளைகளை ஏற்று இறைவன் வகுத்த வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். நம்மை படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவன் கருணை மிகுந்தவன், நமது பாவங்களையும், தவறுகளையும் மன்னிக்கும் பொறுமை மிக்கவன்.

    இதையே இந்த திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் இறைவன் நமக்கு விளக்குகின்றான்:

    `அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்'. (திருக்குர்ஆன் 16:18).

    "நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் ஆகுமான நல்லவைகளையே புசியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால், அவனுடைய அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தி வாருங்கள்". (திருக்குர்ஆன் 16:114).

    இறைவனின் அருட்கொடையான நேர் வழியில் நடந்து, நிம்மதியான வாழ்வைப் பெற வேண்டும் என்றால், முதலில் நாம் இறைவன் மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். மனித வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று இறைவன் காட்டியுள்ள வழியில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் நிம்மதியான வாழ்க்கையை இம்மையிலும், மறுமையில் சொர்க்கத்தையும் பெற முடியும்.

    பேராசிரியர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.

    ×