சினிமா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்தார் விஷால்

Published On 2017-12-04 10:55 GMT   |   Update On 2017-12-04 10:55 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் விஷால் ஆர்.கே.நகருக்கு நேரில் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில், நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். ஏற்கனவே நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட்டிருக்கும் போது, நடிகர் விஷாலும் அரசியலில் குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று காலை அண்ணாநகர் மகா காளியம்மன் கோவிலில் அம்மனை வழிபட்டார். அங்கிருந்து நேராக காமராஜர் நினைவு இல்லத்துக்கு சென்ற விஷால், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து நேராக ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் சென்ற விஷால், அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மேலும் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா நினைவு இடத்திலும் அவரது படத்துக்கும், எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

அதனைத் தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி, ஜெயலலிதா நினைவிடத்திலும் விஷால் மரியாதை செலுத்தினார். 

பின்னர், ஆர்.கே.நகருக்கு சென்ற விஷாலுக்கு டோக்கன் எண் 68வது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக ஆர்.கே.நகரில் காத்துக்கொண்டிருக்கிறார். சரியாக 4.20 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால்.
Tags:    

Similar News