சினிமா

ஆர்.கே.நகரில் போட்டியிடுவது பற்றி 2 நாளில் அறிவிப்பேன்: நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி

Published On 2017-12-02 08:38 GMT   |   Update On 2017-12-02 08:38 GMT
ஆர்.கே.நகரில் போட்டியிடுவது பற்றி 2 நாளில் முடிவு எடுப்பேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளது சினிமா வட்டாரம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர்.

நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மனுதாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்த வில்லை. தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.



முக்கிய தேசிய கட்சி யான பா.ஜனதா இன்னும் வேட்பாளரை அறிவிக்க வில்லை. கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இசை அமைப்பாளர் கங்கை அமரன் பா.ஜனதா வேட் பாளராக போட்டியிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த முறை அவர் உடல் நலக்குறைவு காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை. மற்றொரு பிரபலமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்து இருந்தார்.

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கட்சி மேலிடத்தின் முடிவை எதிர்பார்த்து இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் குதிப்பார் என்று கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஷாலை வேட்பாளராக நிறுத்த முக்கிய அரசியல் கட்சி முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகர் கமல்ஹாசனும், நடிகர் விஷாலை தேர்தலில் போட்டியிடச் செய்து ஆதரவு அளித்து அரசியலில் ஆழம் பார்க்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவுகிறது. சினிமா உலகில் ஊழல் பரவி யுள்ளதாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய விஷால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.



இதுபற்றி நடிகர் விஷாலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறேன். இன்னும் 2 நாளில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவு எடுப்பேன் என்றார்.

சுயேச்சையாக போட்டியிடுவீர்களா? அல்லது அரசியல் கட்சி சார்பில் நிறுத்தப்படுவீர்களா? என்று விஷாலிடம் கேட்டதற்கு, “நான் முடிவு எடுத்த பிறகு எல்லா வி‌ஷயங்கள் பற்றியும் சொல்கிறேன்” என்றார்.

இதன் மூலம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவார் என்றே தெரிகிறது. 4-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்னும் 2 நாளில் முடிவு எடுப்பேன் என்று கூறியிருப்பதன் மூலம் 4-ந்தேதி அவர் முடிவு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி விஷாலுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, தற்போதைய அரசியல் அமைப்பு மோசமாக இருப்பதாக விஷால் கருதுகிறார். அரசியல் மற்றும் அனைத்து மட்டத்திலும் ஊழலை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்பதில் விஷால் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் நேரடி அரசியலில் குதித்து அரசியல் கட்சிகளை வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். அவர்கள் வரிசையில் 3-வதாக விஷால் நேரடி அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News