சினிமா

‘காலா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு: ரஜினிகாந்த் பதில் அளிக்க கோர்ட்டு கால அவகாசம்

Published On 2017-06-16 04:14 GMT   |   Update On 2017-06-16 04:14 GMT
ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்க காலஅவகாசம் வழங்கி, விசாரணையை 23-ந் தேதிக்கு தள்ளிவைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்தவர் கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா. இவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இயக்குநர் ரஞ்சித் இயக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான தனுசுக்கு சொந்தமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக 1995, 1996-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் பதிவு செய்தேன். ‘கரிகாலன்’ என்ற தலைப்பு மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் என்னுடையது.



என்னால் உருவாக்கப்பட்ட ‘கரிகாலன்’ தலைப்பையும், கதையையும் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘காலா என்ற கரிகாலன்’ படத்தை தொடங்கி உள்ளனர்.

எனவே, என்னுடைய ‘கரிகாலன்’ என்ற தலைப்பு, அதன் மூலக்கதையை பயன்படுத்த அவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, மனுவுக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் ரஜினிகாந்த், ரஞ்சித், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியோர் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Tags:    

Similar News