செய்திகள்

பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை வழங்க பாஜகவிடம் சிவசேனா வலியுறுத்தல்

Published On 2019-06-07 03:01 GMT   |   Update On 2019-06-07 03:01 GMT
பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை தங்களது கட்சிக்கு வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவிடம் சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
மும்பை :

பாராளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற 2-வது பெரிய கட்சி சிவசேனா ஆகும். ஆனால் மத்திய மந்திரி சபையில் சிவசேனாவுக்கு ஒரு இடம் மட்டுமே வழங்கப்பட்டது.

அதன்படி அக்கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த், கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மந்திரியாக பதவி ஏற்றார். மத்திய மந்திரி சபையில் ஓரிடம் மட்டுமே வழங்கப்பட்டதால், சிவசேனா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என பா.ஜனதாவிடம் சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “எங்கள் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். அதன்படி எங்களது கோரிக்கையை பா.ஜனதாவிடம் தெரிவித்து விட்டோம்” என்றார்.

கடந்த தடவை பாராளுமன்றத்தில் 2-வது பெரிய கட்சியாக திகழ்ந்த அ.தி.மு.க.வுக்கு துணை சபாநாயகர் பதவியை பா.ஜனதா வழங்கியது குறிப்பிடத்தக்கது. சிவசேனாவின் கோரிக்கையை ஏற்று, துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால், அந்த பதவி மூத்த எம்.பி. பாவனா காவ்லிக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே அயோத்தி விவகாரம் தொடர்பாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதில் எங்களது கட்சி உறுதியாக உள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்காக அழுத்தம் கொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எங்கள் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றார். இந்த நிலையில் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, அதாவது அடுத்த வாரம் மீண்டும் அவர் அயோத்தி செல்கிறார். அவருடன் தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா எம்.பி.க்கள் 18 பேரும் செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News