செய்திகள்

டெல்லியில் ராகுல் காந்தி வீட்டின் முன் சென்னை காங்கிரசார் உண்ணாவிரதம்

Published On 2019-06-03 06:24 GMT   |   Update On 2019-06-03 06:24 GMT
தலைவர் பதவியில் நீடிக்க வலியுறுத்தி டெல்லியில் ராகுல் காந்தி வீட்டு முன்பு அமர்ந்து சென்னை காங்கிரசார் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் படுதோல்வி அடைந்தது. 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 9 தொகுதிகளை கைப்பற்றியது. வட மாநிலங்களில் எதிர்பார்த்த அளவு ஆதரவு கிடைக்கவில்லை.

இந்தநிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் முடிவு செய்தார். ஆனால் ராகுலின் இந்த முடிவை கட்சி ஏற்கவில்லை. மேலிட தலைவர்கள், பிரியங்கா காந்தி உள்பட பலரும் அவரை சமாதானப்படுத்தினார்கள்.

அனைத்து மாநில காங்கிரசாரும் ராகுலுக்கு ஆதரவாக தீர்மானம் போட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ராகுல்காந்தி இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை.

இந்தநிலையில் வடசென்னை மாவட்ட காங்கிரசார் 60 பேர் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் டெல்லி புறப்பட்டு சென்றனர்.


இன்று காலை புதுடெல்லி துக்ளக் லேனில் அமைந்துள்ள ராகுல் காந்தி வீடு முன்பு திரண்டனர். ராகுல்காந்தி பதவி விலகக்கூடாது என்று வலியுறுத்தி திடீரென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

போராட்டத்துக்கு அனுமதி பெறாததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் ராகுல் வீட்டின் எதிரில் ரோட்டோரமாக அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

ராகுலின் பாட்டி இந்திரா பிரதமராக இருந்தபோது ஒரு முறை இதேபோல் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.

அப்போது இந்திராவும் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். அதை கேட்டதும் நாடுமுழுவதிலும் இருந்து 60 ஆயிரம் தொண்டர்கள் இந்திரா வீட்டுமுன்பு திரண்டு முடிவை மாற்றும் படி வற்புறுத்தினார்கள். தொண்டர்களின் எழுச்சியையும், உணர்வையும் மதித்து 2 நாட்களில் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

Tags:    

Similar News