தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி 70-வது பிறந்த நாள்: தமிழ்நாடு முழுவதும் 12-ந்தேதி கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு

Published On 2024-05-10 04:52 GMT   |   Update On 2024-05-10 04:52 GMT
  • வெயில் அதிகமாக இருப்பதால் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • நீர் மோர் பந்தல்கள் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தாலும் கூடுதலாக பல இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நீர்மோர் பந்தல்கள் திறக்க உள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது.

இந்த ஆண்டு 70-வது பிறந்த நாள் காணும் எடப்பாடி பழனிசாமியை கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை வரை சென்னையில் இருந்த அவரை மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சந்தித்து முன் கூட்டியே பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் சேலம் புறப்பட்டு சென்றார்.

வருகிற 12-ந்தேதி பிறந்த நாளன்று அவர் சேலத்தில் இருக்கிறார். வெயில் அதிகமாக இருப்பதால் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்தந்த பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். கோவில்களில் இன்று முதல் சிறப்பு வழிபாடு செய்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு பலர் ஏற்பாடு செய்துள்ளனர்.

காலை சிற்றுண்டி வழங்குதல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, நோட்டு புத்தகம் வழங்குதல், முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களை பாராட்டி கவுரவித்தல், குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்குதல், ஏழை, எளியோருக்கு பிரியாணி வழங்குதல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

நீர் மோர் பந்தல்கள் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தாலும் கூடுதலாக பல இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நீர்மோர் பந்தல்கள் திறக்க உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை 12-ந்தேதி கோலாகலமாக கொண்டாடுவதற்கு அ.தி.மு.க.வினர் இப்போதே தயாராகி விட்டனர்.

Tags:    

Similar News