செய்திகள்

நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

Published On 2019-05-24 02:59 GMT   |   Update On 2019-05-24 05:22 GMT
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மாபெரும் வெற்றியை தன் வசப்படுத்திய பா.ஜ.க.வுக்கும், நரேந்திரமோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்):-

வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாக 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவேண்டும். நரேந்திர மோடி தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்திய உருவெடுக்கும் என்று நம்புகிறேன்.

விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்):-

பாராளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையோடு 2-ம் முறை பாரத பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):-

பா.ஜ.க. அரசில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சியில் அமரப்போவது, ஒட்டுமொத்த இந்தியாவின் வருங்கால வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உறுதி ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியும், பா.ஜ.க.வின் பெரும்பான்மையும் நரேந்திர மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்):-

நரேந்திரமோடியின் உழைப்புக்கு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். 5 ஆண்டு கால சாதனைகள் மூலம் மக்களின் இதயங்களை வென்று, 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்):-

பா.ஜ.க.வின் அமோக வெற்றி இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. மக்களின் பேராதரவோடு மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க இருக்கும் நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சியில் நாடு வல்லரசாக மாறி சாதனை படைக்க வேண்டும்.

Tags:    

Similar News