செய்திகள்

வலங்கைமான் அருகே வியாபாரிக்கு டெங்கு காய்ச்சல்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2019-02-13 11:10 GMT   |   Update On 2019-02-13 11:10 GMT
வலங்கைமான் அருகே வியாபாரிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை டாக்டர்கள் தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள லாயம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் அதே பகுதியில் சொந்தமாக பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் குமார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. இதை தொடர்ந்து குமாரை அவரது உறவினர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்தனர். அதில் குமாருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவரை தனிவார்டில் அனுமதித்து தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுப்பற்றி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவுப்படி லாயம் கிராமத்தில் வேறு யாருக்காவது டெங்கு காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்ய ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை ரத்த பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கொடுத்தனர். தொடர்ந்து அந்த கிராமத்தில் டாக்டர்கள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் வியாபாரி பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News