செய்திகள்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி

Published On 2018-12-15 23:10 GMT   |   Update On 2018-12-15 23:10 GMT
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 500 போலீசார் ‘ஹெல்மெட்’ அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். #Helmet
சென்னை:

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது ஐகோர்ட்டு உத்தரவு ஆகும்.

எனவே ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். எனினும் சில போலீசார் சட்டத்தை மதிக்காமல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து ‘ஹெல்மெட்’ அணியாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போலீசார் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆயுதப்படை துணை கமிஷனர்கள் கே.சவுந்தரராஜன், ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 1,300 போலீசார் பங்கேற்றனர். அப்போது அவர்கள், இனி மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும்போதும், பின்னால் அமர்ந்து செல்லும்போதும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்வோம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 500 போலீசார் ‘ஹெல்மெட்’ அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

எழும்பூர் ருக்மணி சாலை, எத்திராஜ் கல்லூரி சாலை வழியாக சென்ற பேரணி பின்னர் ராஜரத்தினம் மைதானத்தை வந்தடைந்தது. ‘ஹெல்மெட்’ பிரசாரத்துடன் கார்களில் செல்லும் போது ‘சீட் பெல்ட்’ கட்டாயம் அணிய வேண்டும் என்றும் போலீசார் எடுத்துரைத்தனர்.
Tags:    

Similar News