search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    பாகிஸ்தான் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் பரபரப்பு குற்றச்சாட்டு

    முஷரப் மீது தேசத்துரோக வழக்கு போட்டதால்தான், தன் மீது ஊழல் வழக்குகள் போடப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் குற்றம் சாட்டினார். #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட் ஊழல்’ தொடர்பான வழக்கை, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் குற்றவாளிகள் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

    அத்துடன் நவாஸ் ஷெரீப்பை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

    அது மட்டுமின்றி, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் சிங் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்கு தொடுத்து விசாரணை நடத்தவும் ஆணையிட்டது.

    அதன்பேரில் அவர்கள் மீது இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் 3 ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவற்றின்மீது விசாரணை நடந்து வருகிறது.

    3 வழக்குகளில் ஒன்றான லண்டன் சொகுசு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கியது தொடர்பான ‘அவன்பீல்டு’ ஊழல் வழக்கின் விசாரணை நேற்று நடந்தது.

    இந்த விசாரணையின்போது, குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 342-ன் கீழ் நவாஸ் ஷெரீப்பிடம் நீதிபதி கேள்விகள் எழுப்பி பதில்களை பதிவு செய்தார்.

    அப்போது அவரிடம் நீதிபதி, “அவன்பீல்டு ஊழல் வழக்கு உங்கள் மீது எதற்காக பதிவு செய்யப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.

    அப்போது நவாஸ் ஷெரீப் கூறியதாவது:-

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என மிரட்டல்கள் வந்தன. அவற்றை பொருட்படுத்தாமல், அவர் மீது தேசத்துரோக வழக்கு போட்டோம். அதற்கு பழி வாங்கும் விதத்தில்தான் என்மீது ஊழல் வழக்குகள் போடப்பட்டு உள்ளன.

    உளவு அமைப்பின் தலைவர் என்னிடம் ஒன்று பதவி விலகுங்கள் அல்லது நீண்ட கால விடுப்பில் செல்லுங்கள் என்று மிரட்டினார். மூன்றாம் உலக நாடுகளில் கூட ஒரு நாட்டின் தலைமை பதவியில் இருப்பவரை கீழ் நிலை அதிகாரி ஒருவர் இப்படி மிரட்டியது கிடையாது.

    எனக்கு எதிராக பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும் (இம்ரான்கான் கட்சி), பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சியும் சதி செய்தன. முஷரப் மீது தேசத்துரோக வழக்கு போடுவதற்கு முன்னர் நான் இம்ரான்கானை சந்தித்து உள்ளேன். அப்போது அவர் நான் பதவி விலகுமாறு கூறவில்லை.

    ஆனால் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு போட்ட உடன், அவர் தஹிருல் காதிரியை (சன்னி முஸ்லிம் தலைவர்) சந்தித்தபின்னர், என் அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்த முடிவு எடுத்தனர்.

    19 ஆண்டுகளுக்கு முன்னர் என்னை கைவிலங்கு போட்டு, ஆயுள் தண்டனை விதித்தனர். அப்போது பனாமா ஊழல் வழக்கு எழுந்தது உண்டா? இல்லை. அப்போதும் நான் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் தான் இருக்க வேண்டும் என்று கூறினேன்.

    நான் இந்த மண்ணின் மைந்தன். தேசப்பற்று குறித்து யாரும் எனக்கு சான்றிதழ் தர அவசியம் இல்லை. எங்கள் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடு வளர்ச்சி கண்டு உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சிலருக்கு மகிழ்ச்சியை தரலாம். ஆனால் பாகிஸ்தானுக்கு அது நல்லது அல்ல. இந்த தீர்ப்புக்கு பின்னர் ஸ்திரமற்ற நிலை உருவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NawazSharif
    Next Story
    ×