search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியான்மர் மீது போர் தொடுக்கவேண்டும்: வங்காளதேச மக்கள் போராட்டம்
    X

    மியான்மர் மீது போர் தொடுக்கவேண்டும்: வங்காளதேச மக்கள் போராட்டம்

    ரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், இப்பிரச்சினையை தீர்க்க மியான்மர் மீது போர் தொடுக்கவேண்டும் என்று வங்காளதேச மக்கள் போராட்டம் நடத்தினர்.
    டாக்கா:

    மியான்மரில் ரக்கினே மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களுக்கு எதிராக மெஜாரிட்டியாக வாழும் புத்தமதத்தினர் தாக்குதலில் ஈடுபட்டதால் கலவரம் மூண்டது. அதை தொடர்ந்து அங்கு வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. ஏராளமான ரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

    அதை தொடர்ந்து உயிர் தப்பிக்க ரோகிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காள தேசத்துக்கு நடை பயணமாகவும், படகு மூலமாகவும் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 3 வாரத்தில் மட்டும் இங்கு 4 லட்சம் ரோகிங்யா மக்கள் அகதிகளாக வந்துள்ளனர்.

    அவர்கள் வங்காள தேசத்தில் காஸ் பஜாரில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ராணுவம் உதவி செய்து வருகிறது.

    மியான்மரில் ரோகிங்யா மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வங்காள தேசத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெள்ளிக் கிழமையான நேற்று டாக்காவில் உள்ள மிகப் பெரிய பள்ளி வாசலில் தொழுகை நடைபெற்றது.

    அதன் பின்னர் 5 முஸ்லிம் அமைப்பினர் சேர்ந்து மியான்மருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அப்போது மியான்மரின் தேசிய கொடி தீயிட்டு எரிக்கப்பட்டது. அந்நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சாங்- சூகிக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இப்போராட்டத்துக்கு ஹபாசாத் பிரிவின் மதரசா ஆசிரியர் நூர் உசேன் கெசமி தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, “மியான்மரில் ரக்கினே மாகாணத்தில் மைனாரிட்டியாக வாழும் ரோகிங்யா முஸ்லிம்களை பாதுகாக்க சர்வதேச சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மியான்மர் அரசு நடத்தும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும். இப்பிரச்சினையை தீர்க்க மியான்மர் மீது வங்காளதேசம் போர் தொடுக்க வேண்டும்.

    அதுவே இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையும். மேலும் மியான்மர் மீது போர் தொடுக்க இதுவே சரியான தருணம்’ என்றார். அதை போராட்டக்காரர்கள் வரவேற்று கைதட்டினர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம் நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களிலும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
    Next Story
    ×