search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இர்மா புயல் மேலும் வலுவடைந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சூறையாடியது
    X

    இர்மா புயல் மேலும் வலுவடைந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சூறையாடியது

    அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை துவம்சம் செய்த பின்னர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை இன்று தாக்கியது.
    நியூயார்க்:

    அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை துவம்சம் செய்த பின்னர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை இன்று தாக்கியது.
    ஏற்கனவே அமெரிக்காவின் கீழ் பகுதியில் உள்ள கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளை தாக்கி துவம்சம் செய்து 25 உயிர்களை  பறித்த இர்மா புயல் தற்போது புளோரிடாவுக்குள் நுழைந்துள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

    ஹவானா பகுதியை பதம் பார்த்த பின்னர் முன்பைவிட மேலும் சற்று வலுவடைந்து நான்காம் எண் எச்சரிக்கையுடன் கியூபாவை கடந்து,  புளோரிடா மாநிலத்தை தாக்கிக் கொண்டிருக்கும் ‘இர்மாவின்’ புயல் படிப்படியாக நகர்ந்து ஜார்ஜியா, கரோலினாஸ் மாகாணங்களையும் அடுத்த வாரம் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஏராளமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள், மீட்பு படகுகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நீச்சல் வீரர்கள் மற்றும் மீட்பு படையினரும் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

    புளோரிடா மாநிலத்தின் கடலோர பகுதிகளில் வாழும் சுமார் 70 லட்சம் மக்களை தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அமெரிக்காவின் பேரிடர் மற்றும் அவசரக்கால நிவாரண முகமை வலியுறுத்தி உள்ளது. நிவாரண முகாம்களில் சுமார் 2 லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    சுமார் 2 லட்சம் வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள இந்த மாநிலத்தில் அமெரிக்க இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

    புயல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இர்மா புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என மக்களை எச்சரித்துள்ளார்.
    Next Story
    ×