search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    596 கி.மீ. தூர மனித சங்கிலி போராட்டத்துக்கு வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன் முழு ஆதரவு
    X

    596 கி.மீ. தூர மனித சங்கிலி போராட்டத்துக்கு வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன் முழு ஆதரவு

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 12-ந்தேதி நடைபெறும் 596 கி.மீ. தூர மனித சங்கிலி போராட்டத்துக்கு வைகோ, திருமாவளவன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்தின் தலை மீது கல்லைத் தூக்கிப் போடும் வேலையை மத்திய பா.ஜ.க. அரசு தொடங்கிவிட்டது. காவிரி பாசன பகுதி மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு எடுக்கும் திட்டங்களை எதிர்த்து கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் அறவழியில் போராடி வருகின்றனர்.

    தமிழகத்தின் உயிராதாரமான வேளாண்மைத் தொழிலை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி, சொந்த மண்ணிலே விவசாயிகளை அலைய விடுவதற்கு பா.ஜ.க. அரசு தீட்டி உள்ள ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்கு கைட்டி, வாய் பொத்தி அடிமைச் சேவகம் புரிகின்ற எடப்பாடி பழனிசாமி அரசு அனுமதி அளித்துவிட்டது.

    காவிரிப் படுகையை இரு மண்டலமாகப் பிரித்து, மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

    ஜூன் 12 -ந்தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது.

    வேளாண்மைத் தொழிலைக் காக்கும் மனிதச் சங்கிலி அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதச் சங்கிலியில் நானும் பங்கேற்கிறேன்.

    மத்திய, மாநில அரசுகளுக்கு தரப்படும் எச்சரிக்கை மணி என்பதைத் தெரிவிக்கும் வகையில் விவசாயிகள், மாணவர்கள், வணிகப் பெருமக்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், இளைய தலைமுறையினர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று மனிதச் சங்கிலிப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வாரீர் அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தைப் பாலைவனமாக்கும் தீய நோக்கத்தோடு மத்தியில் ஆளும் மோடி அரசால் தொடங்கப்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்’ நடத்தும் மனிதசங்கிலிப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்குக் கடற்கரை முழுவதும் கடலிலும், நிலத்திலும் நூற்றுக்கணக்கான ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான உரிமங்களை அம்பானியின் ரிலையன்ஸ், வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு வழங்கியுள்ளது.

    இந்த பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து ஏற்கனவே விவசாய அமைப்புகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் ஜூன் 12-ம் தேதி 596 கிலோமீட்டர் தொலைவுக்கு மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நலன் காக்கும் இந்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஹைட்ரோ கார்பன் திட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதல்வர் கூறியிருப்பது போல தமிழக முதலமைச்சரும் உறுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மார்க்சிஸ்டு கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களை மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் திட்டமிட்டு செயல்படுத்த முனைந்து வருகின்றன.

    தற்போது 5-ந் தேதி முதல் 10-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துவருகிற 12-ந் தேதி 596 கிலோ மீட்டர் தூரம் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தவுள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், விளை நிலங்களை காப்பாற்றவும் நடைபெறும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.

    இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் கட்சி அணிகள் முழுமையாக கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமெனவும் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×