search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது அருந்துவதால் 200 வகை நோய்கள் தாக்குகின்றன -  ராமதாஸ் அறிக்கை
    X

    மது அருந்துவதால் 200 வகை நோய்கள் தாக்குகின்றன - ராமதாஸ் அறிக்கை

    மது அருந்துவதால் 200 வகை நோய்கள் தாக்குகின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ உலகின் புனித இதழாகப் போற்றப்படும் லான்செட் இதழில் உலக அளவிலான மதுநுகர்வு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள டி.யூ. டிரெஸ்டன் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், இந்தியாவில் மதுநுகர்வு கடந்த 7 ஆண்டுகளில் 38 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    கடந்த 2010-ம் ஆண்டில் இந்தியாவில் வயதுக்கு வந்தவர்களிடையே சராசரி தனிநபர் மதுநுகர்வு 4.30 லிட்டராக இருந்தது. 2017-ம் ஆண்டில் இது 5.90 லிட்டராக அதிகரித்திருக்கிறது. இந்தியர்கள் மது குடிக்கும் அளவு மட்டுமின்றி, குடிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தான் இதற்குக் காரணம் என்பதை உணர முடிகிறது.

    இதேநிலை தொடர்ந்தால் விரைவில் இந்தியா குடிகார நாடு என்ற பெயரைப் பெறும் என்பது உண்மை. 2030-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள வயதுக்கு வந்தோரில் 50 விழுக்காட்டினர் குடிகாரர்களாகி இருப்பர்; 23 விழுக்காட்டினரால் மாதத்திற்கு ஒரு முறை குடிக்காமல் இருக்க முடியாது என்ற மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

    மதுவால் ஏற்படும் தீமைகளை 38 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நான், அதற்கு ஒரே தீர்வு மதுவிலக்கு தான் என்பதையும் அறிவுறுத்தி வருகிறேன். மது குடிப்பதால் சிறிது நேரம் கிடைக்கும் போதை மட்டும் தான் குடிகாரர்களுக்கு பெரிதாக தெரிகிறது.

    ஆனால், மது அருந்துவதால் 200 வகையான நோய்கள் தாக்குகின்றன; குடிகாரர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள் சீரழிகின்றன; களவு முதல் பாலியல் வன்கொடுமை வரை அனைத்து வகையான குற்றங்களும் நிகழ்கின்றன. இந்தத் தீமைகள் எதுவும் குடிக்கு அடிமையானவர்களுக்கு உரைப்பதில்லை. இது தான் என்னை வாட்டும் கவலையாகும்.

    பெரும்பான்மையான மாநிலங்கள் மதுவிற்பனையை வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறையாக மாற்றி இருக்கிறது. வருவாய்க்கு ஆசைப்பட்டு மக்களின் வாழ்க்கையை அரசுகள் பறிக்கக்கூடாது.

    தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக போராடி வரும் நிலைமை மாறி, நாடு முழுவதிலும் மது விலக்குக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தான் லான்செட் இதழ் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

    நாடு முழுவதும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இப்போதாவது விழித்துக் கொண்டு மதுவிலக்கு பாதையில் பயணிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

    மது விலக்கை நடை முறைப்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் மானியங்களை வழங்குதல், வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாவது மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×