search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுபான்மை மக்களுக்கு அதிமுக துணையாக இருக்கும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
    X

    சிறுபான்மை மக்களுக்கு அதிமுக துணையாக இருக்கும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

    சிறுபான்மை மக்களுக்கு உற்ற துணையாக அ.தி.மு.க. அரசு இருக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #admk

    வாணியம்பாடி:

    வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து இன்று துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தத்தில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த காலத்தில் காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டணி அமைத்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினையான காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    கருணாநிதியின் ஆட்சி காலத்திலேயே கர்நாடகாவில் 4 அணைகள் கட்டப்பட்டன. அதற்கு உரிய அனுமதியை அவர் அளித்ததால் தமிழகத்திற்கு காவிரி நீர்வரத்து குறைந்துவிட்டது.

    அதன்பிறகு ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா சட்ட போராட்டம் மூலமாக காவிரி நதிநீரில் தமிழகத்திற்கான உரிமையை பெற்று தந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான தீர்ப்பை பெற்று அதை அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கை எடுத்தார்.

    இலங்கையில் போர் தீவிரமடைந்தபோது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடினார். அப்போதைய மத்திய அரசிடம் பேசி போரை நிறுத்துவதாக அறிவித்தார். அதை நம்பி இலங்கையில் பதுங்கு குழிகளில் இருந்து வெளியேறிய தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்தது. அதில் சுமார் 5 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்தனர். இலங்கையில் நடந்த இறுதி கட்டபோரில் 4 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இதையெல்லாம் மறந்து விட்டு அப்போதைய மத்தியஅரசு குழுவுடன் இணைந்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த குழுவினர் ராஜபக்சேவை சந்தித்து பரிசு பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று அறிவித்தார்.

    ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும், சேர்ந்து தமிழகத்தை தீவைத்து கொளுத்துவதாக மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். உண்மையில் நாங்கள் தீ வைக்கவில்லை. மாமா, மச்சான் சண்டையில் பத்திரிகை அலுவலகத்தை தீவைத்து கொளுத்தியது அவர்கள்தான்.

    தி.மு.க. ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு என நடத்தப்பட்ட அராஜகங்களை பொதுமக்கள் யாரும் மறக்கமாட்டார்கள்.

    ஓட்டல்களில் சென்று சாப்பிட்டால் கூட பிரியாணிக்கும், புரோட்டாவுக்கும் காசுகொடுக்காமல் அடித்து நொறுக்குவது அவர்களுடைய வழக்கம். இதற்காகவே பல ஓட்டல்களில் தற்போது சாப்பிடுவதற்கு முன்பு டோக்கன் வாங்கும் முறையை கொண்டு வந்துவிட்டனர்.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக ஜெயலலிதா வளர்த்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியை பற்றி குறை கூறும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க ஆட்சி தொடரும். இது பெரிய ஆலமரம். எந்த புயலுக்கும் அசையாது.தொண்டர்கள் இயக்கமான அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

    முதல் அமைச்சராக வர வேண்டுமென ஆசைப்படும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது. சேது சமுத்திர திட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தபோது மணல் நகரும் தன்மை கொண்டது. அதனால் இந்த திட்டத்தால் பிரயோஜனம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். சேது சமுத்திர திட்டத்திற்கு ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் 40 ஆயிரம் கோடியை கடலில் போட்டுவிட்டார்கள். கடலில் போட்டார்களா அல்லது வேறு யாரிடமாவது போட்டார்களா என்பது தெரியவில்லை.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தனர். அது தொடர்ந்து நிறைவேற்றப்படுகிறது.

    சிறுபான்மை மக்களுக்கு பல திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். ரம்ஜானுக்கு இலவச அரிசி, ஹஜ் பயனாளிக்கு சிறப்புநிதி , ஜெருசலேம் செல்பவர் களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழகம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். சிறுபான்மை மக்களுக்கு உற்ற துணையாக அ.தி.மு.க. அரசு இருக்கும். பகிர்ந்து உண்டால் பசி தீரும் விட்டு கொடுப்பவன் கெட்டுபோவ தில்லை. என்று ஜெயலலிதா அடிக்கடி கூறுவார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதியிலும் வெற்றி பெறும். இந்த தொகுதியில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம் எம்.பி உடன் இருந்தவர் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவருக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×