search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து மதத்தினரையும் மதிக்கும் கட்சிகளை கொண்டது திமுக கூட்டணி - வைகோ
    X

    அனைத்து மதத்தினரையும் மதிக்கும் கட்சிகளை கொண்டது திமுக கூட்டணி - வைகோ

    திமுக கூட்டணி அனைத்து மதத்தினரையும் மதிக்கும் கட்சிகளை கொண்ட கூட்டணி என பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ கூறியுள்ளார். #vaiko

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். விக்கிரமசிங்கபுரத்தில் தொடங்கிய பிரசாரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, பத்தமடை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை வழியாக நெல்லை டவுனில் முடிவடைந்தது.

    டவுன் கீழரதவீதி தேரடி திடலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-

    இந்திய நாட்டின் 17-வது பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகமா? மதசார் பின்மையை தகர்த்து பாசிச ஆட்சியா? என்ற கேள்விக்கு விடை காணும் தேர்தல் ஆகும். இந்த நாட்டில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு சமயங்கள், பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவை உள்ளன. ஆனால் அனைவரும் அன்புடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

    இதனை தகர்க்கும் பணியில் மத்தியில் ஆளும் மோடி ஆட்சி செய்து வருகிறார். ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதை மக்கள் மத்தியில் திணிக்க பார்க்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மதசார்பின்மை நசுக்கப்பட்டதுடன், அழிக்கப்பட்டும் விட்டது. தி.மு.க. கூட்டணி அனைத்து மதத்தினரையும் மதிக்கும் கட்சிகளை கொண்ட கூட்டணி ஆகும்.

    மோடி தமிழகத்தை அழிக்க முடிவு கட்டி விட்டார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி கொடுத்துவிட்டனர். இதன்மூலம் தஞ்சை பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாகி விடும். சென்னைக்கு வீராணம் ஏரி மூலம் குடிநீர் கிடைக்காது. 10 ஆண்டுகளில் விவசாயிகளின் நிலம் அனைத்தும் அதானி, அம்பானி, ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் விலைக்கு வாங்கி விடுவார்கள்.

    அதன்பிறகு அவர்கள் அதில் விவசாயம் செய்யப்போவதில்லை. 5 ஆயிரம் அடிக்கு கீழே இருக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற வாயுக்களை எடுப்பார்கள். இதன்மூலம் மத்திய அரசுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் கிடைக்கும். அது உண்மைதான். ஆனால் தஞ்சை பகுதி பாலைவனம் ஆகிவிடும்.

    மத்திய அரசே ஏன் இந்த கொடுமையை செய்கிறீர்கள். இதை தடுக்க நாம் முடிவு எடுத்தே ஆக வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இதன் மூலமும் தமிழகத்தை அழிக்க முயற்சி நடைபெறுகிறது. இதெல்லாம் எதற்காக என்றால், தமிழகத்தில்தான் திராவிட இயக்கத்தால் மொழி, இன, உணர்வு வளர்க்கப்பட்டு உள்ளது. இதை தகர்க்க மோடி செயல்பட்டு வருகிறார்.

    இதை தட்டிக்கேட்க வேண்டிய அ.தி.மு.க. அரசு ஊழல் நிறைந்து விட்டதால் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கிறது. மராட்டிய மாநிலத்தில் தகர்த்து எறியப்பட்ட ஸ்டெர்லைட் நாசகார ஆலையை 1994ம் ஆண்டு தூத்துக்குடியில் அமைக்க அனுமதி அளித்தார்கள். அதை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற அப்பாவி பொதுமக்கள் 13 பேரை போலீசார் மூலம் சுட்டுக் கொன்றனர்.

    மத்திய அரசும், மாநில அரசும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. இதற்கெல்லாம் ஜனநாயக நீதிபதிகளான, வாக்காளர்களாகிய மக்கள்தான் தீர்ப்பு எழுத வேண்டும். வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி அதற்கான நாள் வருகிறது. அன்று மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறியும் வகையில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு வைகோ பேசினார். #vaiko

    Next Story
    ×