search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்தில் மீன் விலை இருமடங்கு உயர்வு
    X

    மாமல்லபுரத்தில் மீன் விலை இருமடங்கு உயர்வு

    மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்து மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்வதாலும் கடல் மீன்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
    மாமல்லபுரம்:

    கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடை காலம் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இது வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 60 நாட்கள் நீடிக்கும்.

    மீன்பிடி தடையால் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வரும் மீன்களின் வரத்து குறைந்து உள்ளது.

    மீன் பிரியர்களின் தேவைகளை சமாளிக்க வியாபாரிகள் ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்து மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனால் கடல் மீன்களின் விலை இரு மடங்காக உயந்துள்ளது. மீன் சந்தை பகுதிகளான மாமல்லபுரம், கோவளம், அம்பாள்நகர், திருப்போரூர், திருக்கழுகுன்றம் வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம், சதுரங்கபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மீன்கள் விலை இரு மடங்காக உயந்து தட்டுப்பாடும் ஏற்பட்டது.

    இதனால் சிறு வகை துடுப்பு படகுகளில் சென்று மீன்பிடித்து திரும்பிய மீனவர்களின் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

    பெரிய வகை மீன்களான சங்கரா, வஞ்சிரம், சுறா, கானாகத்தி, பாறை வகை மீன்கள் குறைந்த அளவே விற்பனைக்கு வந்து இருந்தது.

    சிறிய வகை சங்கரா, சுறா உள்ளிட்ட மீன்கள் ஏராளமாக கொண்டு வரப்பட்டு இருந்தது. ரூ. 200-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ இறால் இன்று ரூ. 400 வரை விற்கப்படுகிறது.
    Next Story
    ×