search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
    X

    கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

    எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் ரெயில் மறியல் செய்ய கோவை ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.

    இதில் தமிழ் புலிகள் கட்சி இளவேனில், திராவிடர் விடுதலை கழகம் நேருதாஸ் விடுதலை சிறுத்தைகள் பால சிங்கம், எஸ்.டி.பி.ஐ. ரஹூப், தமிழர் விடியல் கட்சி நவின், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன் மற்றும் மே17 இயக்கம்,பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் 150 பேர் திரண்டு வந்து இருந்தனர்.

    அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். பின்னர ரெயிலை மறிக்க உள்ளே செல்ல முயன்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது சிலர் தடுப்பை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு உருவானது. போலீசார் அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    150 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இவர்கள் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இதே கோரிக்கைளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட பல்வேறு அமைப்பினர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வந்த ரெயிலில் வந்திறங்கினர்.

    ரெயில் மேட்டுப்பாளையத்திற்கு மீண்டும் புறப்பட்ட போது அவர்கள் ரெயில் முன் அமர்ந்தும், ரெயில் மீது ஏறியும் மறியல் செய்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். அவர்கள் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த இரு சம்பவங்களால் கோவை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×