search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங். அரசுக்கு களங்கம் ஏற்படுத்த கவர்னர் முயற்சி- நாராயணசாமி மீண்டும் குற்றச்சாட்டு
    X

    காங். அரசுக்கு களங்கம் ஏற்படுத்த கவர்னர் முயற்சி- நாராயணசாமி மீண்டும் குற்றச்சாட்டு

    கவர்னர் வேண்டுமென்றே காங்கிரஸ் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைக்க கோரி மனித சங்கிலி போராட்டம் நாளை மறுநாள் நடக்கிறது. அண்ணா சிலையில் தொடங்கி காமராஜர் சாலை, நேருவீதி, மாதா கோவில் வீதி சந்திப்பு வரை போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்துக்கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

    மத்திய அரசை தொடர்ந்து பல காலகட்டங்களில் வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தமிழகம், புதுவை விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை.

    முழு அடைப்பு, உண்ணாவிரதம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் என பல போராட்டங்களை தொடர்ந்து மனித சங்கிலியும் நடத்த உள்ளோம்.

    இந்த காலகட்டத்திலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு 6 வாரம் கழித்து விளக்கம் கேட்டு மனு அளித்த போதும், சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறை வேற்றியபோதும் வாய்மூடி மவுனமாக இருந்த என்ஆர்.காங்கிரசும், அதன் தலைவர் ரங்கசாமியும் சில நாள் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.

    சட்டமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது என்.ஆர். காங்கிரஸ் சட்ட மன்றத்திலேயே இல்லை. சட்டசபையை புறக்கணித்து வெளியேறினர்.

    மோடி புதுவை வந்தபோது அமைச்சர்களோடு நான் சந்தித்தபோதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இருந்தேன். அதன் பின் நினைவூட்டல் கடிதமும் அனுப்பினேன்.

    அப்போதெல்லாம் வாய்மூடி கும்பகர்ண தூக்கத்தில் இருந்த ரங்கசாமி உண்ணாவிரதம் நடத்தியுள்ளார். இதில் புதுவையில் இருந்து ஆட்களை அழைத்து சென்றுள்ளனர். என்ஆர்.காங்கிரசின் இத்தகைய நாடகத்தை மக்கள் ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கின்றனர். என்.ஆர்.காங்கிரசின் கபட நாடகம் மக்களிடம் எடுபடாது.

    இலவச அரிசிக்காக கவர்னரிடம் ஒப்புதல் பெற கோப்பு அனுப்பியிருந்தோம். 6 மாத காலத்திற்கு ரூ.180 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டிருந்தோம்.

    ஆனால், ரூ.20 கோடிக்கு நிதி ஒதுக்க கவர்னர் ஒப்புதல் அளித்தார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கணக்கெடுக்கவும் உத்தரவிட்டிருந்தார். மஞ்சள் ரே‌ஷன் கார்டு வைத்திருப்பவர்களில் 48 ஆயிரம் பேர் தாங்களும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பதாகவும், இலவச அரிசி வேண்டும் எனவும் மனு செய்துள்ளனர். அவர்களின் மனு பரிசீலனையில் உள்ளது.

    இந்த நிலையில் அரிசிக்கு பதிலாக பணம் தர வேண்டும் என கவர்னர் கூறினார். கிருமாம்பாக்கத்திற்கு கவர்னர் சென்றபோது அப்பகுதி மக்கள் பணம் வேண்டாம், அரிசிதான் வேண்டும் என கூறினர். அரிசி மாதத்திற்கு மாதம் ஒரு விலையில் விற்கப்படுகிறது.

    அதோடு மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலில் இலவச அரிசி தருவோம் என வாக்குறுதி அளித்திருந்தோம். மக்களால் தேர்வு செய்த அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது கடமை.

    எந்த முட்டுக்கட்டை ஏற்பட்டாலும் அதை தாண்டி வாக்குறுதியை நிறைவேற்றித்தருவோம். கவர்னர் வேண்டுமென்றே காங்கிரஸ் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

    இதற்காக இலவச அரிசி வழங்குதற்கு காலதாமதம் செய்கிறார். காலம் மாறும். 6 மாத காலத்தில் தலை கீழாக காலம் மாறும். இதற்காக அமைதியாக காத்திருக்கிறோம். அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×