search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி - ஓ.பி.எஸ். நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை - கே.சி. பழனிசாமி
    X

    எடப்பாடி - ஓ.பி.எஸ். நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை - கே.சி. பழனிசாமி

    எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கூறி உள்ளார்.
    கோவை:

    அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட தேர்தல் விதிகளை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்குவது செல்லாது என அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கூறி உள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி குறித்து இவர் தேர்தல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒரு மனு செய்திருந்தார். அதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து கே.சி. பழனிசாமி கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரை அடிமட்ட தொண்டர்கள் ஓட்டு போட்டு தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் கட்சியின் விதி. ஆனால் கட்சியின் பொதுக் குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தார்கள். இதை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு கொடுத்திருந்தேன்.

    அதன்பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஓ.பன்னீர் செல்வமும், மதுசூதனனும் கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படவில்லை என தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் அணிகள் இணைந்த பிறகு பொதுக் குழுவை கூட்டி இவர்களாகவே பொதுச்செயலாளர் அதிகாரத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நியமித்துக் கொண்டனர். இதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்தேன்.

    பொதுக்குழுவை கூட்டி நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்கள் செல்லும் என்றால் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லுபடியாகும். ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருந்த நேரத்தில் சின்னத்தை மீட்க வேண்டும் என்பதால் தேர்தல் ஆணையத்தில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் என்னிடம் கேட்டனர். அப்போது நான் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே கொடுத்த மனுவை வாபஸ் வாங்க மாட்டேன். வேண்டுமானால் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறேன் என கூறினேன்.



    தேர்தல் ஆணையம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குள்ளாகவே இவர்களாக என்னோடு சேர்த்து 3 ஆயிரம் பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி உள்ளனர். இது செல்லாது. தேர்தல் ஆணையம் இவர்களது நியமனத்தை ஏற்றுக் கொண்டது போன்று தொண்டர்கள் மத்தியில் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு குறித்து தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என ஒரு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து மத்திய அரசின் முடிவுக்காக வருகிற 29-ந் தேதி வரை பொறுத்திருப்போம் என ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

    29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மெரீனாவில் அம்மா சமாதியில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பார்களா?

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×