search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் கோவில் பெண் அதிகாரிகளை கடைக்குள் பூட்டி சிறைவைப்பு
    X

    கும்பகோணம் கோவில் பெண் அதிகாரிகளை கடைக்குள் பூட்டி சிறைவைப்பு

    கும்பகோணம் மகா மக குளக்கரையில் செயல்படும் புத்தக கடையை கோவில் அலுவலர்கள் அகற்ற முயன்றபோது அவர்களை கடைக்குள் வைத்து பூட்டிய டி.டி.வி. தினகரன் ஆதரவாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மகாமக குளக்கரையில் காசி விஸ்வநாதர் கோவில் முன்பு கடந்த 15 ஆண்டுகளாக வெங்கடேசன், முருகேசன் மற்றும் உறவினர்கள் என 6 பேர் கோவில் விழா மண்டப இடத்தில் புத்தகக் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் ஆவார்கள்.

    இந்த நிலையில் கடந்த மகாமக திருவிழாவின்போது இந்த கடையை காலி செய்யுமாறு இந்துசமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    கோவில் திருவிழா காலங்களில் விழா மண்டபம் ஒட்டி இந்த கடை அமைந்துள்ளதால் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறப்பட்டது. மேலும் மாசிமக தீர்த்தவாரி, சுவாமி புறப்பாடு இந்த மண்டபத்தில் இருந்துதான் நடக்கும். எனவே கடையை காலி செய்யக் கடை நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை கடையை காலி செய்ய வில்லையாம்.

    இதையடுத்து அவர்களுக்கு முறையாக கோவில் நிர்வாகம் சார்பில் கால அவகாசம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போதும் அவர்கள் காலி செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இன்று காலை ஆதிகும்பேஸ்வரரர் கோவில் செயல்அலுவலர் கவிதா , மற்றும் கும்பகோணம் பகுதி கோவில்களின் செயல் அலுவலர்கள் கவியரசன், ஜெயப்பிரகாஷ், சுதா, நிர்மலாதேவி, உதவி ஆணையர் பொறுப்பு சிவராம்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள் புத்தக கடைக்கு சென்று கடையை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டனர். அப்போது கடை உரிமையாளர்கள் அங்கு இல்லை.

    ஆனால் எந்த பதிலும் கடையில் இருந்த ஊழியர்கள் கூறாததால் செயல்அலுவலர்கள், உதவி ஆணையர், ஊழியர்கள் கடைக்குள் சென்று புத்தகங்களை எடுத்து வெளியில் கொண்டு வந்து வைத்து கடையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த வெங்கடேசன் இதைக்கண்டு ஆவேசமடைந்து கடையின் ‌ஷட்டரை வேகமாக இழுத்து மூடி பூட்டி சிறை வைத்தார். அந்த சமயத்தில் கடைக்குள் இருந்த பெண் செயல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என 10 பேரும் வெளியில் வரமுடிய வில்லை. இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    அப்போது வெளியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த கும்பகோணம் மேற்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கடை உரிமையாளரிடம் கடையை திறக்குமாறு கூற, அவர் மறுத்துவிட்டார். வெங்கடேசனுக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் சிலரும் அங்கு வந்தனர்.

    அப்போது போலீசார் கடையை உடனடியாக திறக்காவிட்டால் உங்களை கைது செய்து மேல் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதையடுத்து அவர் ‌ஷட்டரை திறந்து விட்டார். இதையடுத்து கடைக்குள் இருந்த 10 பேரும் அவசர அவசரமாக பதட்டத்துடன் வெளியில் ஓடி வந்தனர்.

    பின்னர் கோவில் நிர்வாகத்தினர், செயல் அலுவலர்கள் மற்றும் போலீசார் கடையை அகற்றுவது குறித்து வெங்கடேசனுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தகவல் அறிந்து கும்பகோணம் டி.எஸ்.பி. கணேசமூர்த்தி அங்கு வந்தார். அப்போது அரை மணி நேரத்துக்குள் கடையை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஆனால் வெங்கடேசன் மற்றும் அங்கு வந்த தினகரன் ஆதரவாளர்கள் கடைக்கு சென்று நின்றுகொண்டு வெளியில் வரமறுத்துள்ளனர். இதனால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

    அப்போது கடைக்கு வெளியே நின்ற வெங்கடேசன் தனது உடலில் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

    இதனால் வெங்கடேசனின் உறவினர்கள் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வெங்கடேசன் உள்ளிட்டோரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

    Next Story
    ×