search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.ஆர். காங். ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது - நாராயணசாமி தாக்கு
    X

    என்.ஆர். காங். ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது - நாராயணசாமி தாக்கு

    என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் வாகன போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில் முக்கிய இடங்களில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதுபோல் வில்லியனூர்-கூடப்பாக்கம் செல்லும்சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னலின் தொடக்க விழா நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி சிக்னலை இயக்கி தொடக்கி வைத்து பேசியதாவது:-

    போக்குவரத்தை சரி செய்வதின் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும். அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக பேசி வருகிறோம். அரும்பார்த்தபுரம் ரெயில்வே பாலம் விரைவில் சரி செய்யப்படும். 100 அடி சாலையின் மற்றொரு பகுதி பாலம் விரைவில் திறக்கப்படும்.

    போலீஸ் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளோம். தவறு செய்தாலும் விடமாட்டோம். போலீசார் விதிகளை மீறினாலும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    கடந்த ஆட்சியில் ரவுடிகளின் ராஜ்ஜியம்தான் நடைபெற்றது. ரவுடிகள் மக்களை மிரட்டி நிலங்களையும், தொழிலதிபர்களை மிரட்டி பணத்தையும் பறித்து வந்தனர். நாங்கள் ஆட்சிக்கு வந்து சட்டம்-ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுத்து சீரமைத்துள்ளோம். தற்போது ரவுடிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். பிரபலமான ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பிரதமரை சந்தித்து நிதி கோருகிறோம். டெல்லி சென்று சந்திக்கிறோம். புதுவைக்கு கிடைக்க வேண்டிய மற்றும் விதிமுறைப்படி கிடைக்க வேண்டிய நிதியை தான் கேட்கிறோம்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவைக்கு தனி கணக்கு ஆரம்பித்தபோது மத்திய அரசு கொடுத்திருந்த மானியத்தொகையை கடனாக கருதி கேட்டு வரும் தொகை ரூ.2400 கோடி, 7-வது ஊதியக்குழு நிறைவேற்றுவதற்கான ரூ.1200 கோடி, திட்டமில்லா செலவினங்களுக்கு ரூ.1200 கோடி, 6-வது ஊதியக்குழு பரிந்துரை நிறைவேற்ற நிலுவைத்தொகை, தானே புயல் நிவாரண நிலுவைத்தொகை உள்ளிட்ட புதுவைக்கு மத்திய அரசு முறையாக தரவேண்டிய நிதி ரூ.6675 கோடி ஆகும்.

    இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளோம். புதுவை வரும் பிரதமரை சந்தித்து இக்கோரிக்கையை வைக்க உள்ளோம்.

    கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் மிக்சி, கிரைண்டர் வாங்கியதில் ஊழல் நடைபெற்றது. இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி கொடுத்த அறிக்கையில் 40 ஆயிரம் மிக்சி, கிரைண்டர்கள் கொடுக்கப்படாமல் இன்னும் குடோனில் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதுதொடர்பாக விசாரிக்கப்படும். இது ஒற்றை டெண்டரில் வாங்கியுள்ளனர். அனைத்து துறைகளிலும் கடந்த ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. அரிசி விலை குறைந்ததால் புது டெண்டர் விட உள்ளோம். அது தெளிவாக மக்கள் அறியும் வகையில் செய்கிறோம். அதனால் காலதாமதம் ஆகிறது.

    சேதராப்பட்டு மற்றும் காரைக்காலில் ரூ.600 கோடி முதலீட்டில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், டி.ஐ.ஜி. ராஜீவ்ரஞ்சன், போலீஸ் சூப்பிரண்டு குர்தீப்சிங் பன்வார்லால் ஆகியோர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×