search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் இன்று அதிகாலை 8 குடிசை வீடுகளில் தீ விபத்து: ரூ.40 லட்சம் சேதம்
    X

    சீர்காழியில் இன்று அதிகாலை 8 குடிசை வீடுகளில் தீ விபத்து: ரூ.40 லட்சம் சேதம்

    சீர்காழியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெரு மேல சந்து பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அங்கு வசித்து வந்த சண்முகம் (வயது 53) என்பவர் குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.

    மேலும் தீ மளமள என்று பரவி பக்கத்து குடிசை வீடுகளிலும் பிடித்தது. அதிகாலை நேரம் என்பதால் குடிசை வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள், தீ பிடித்து எரிவதை கண்டதும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர்.

    சண்முகம் வீட்டில் பிடித்து எரிந்த தீ, அடுத்தடுத்து வசித்து வந்த கலியமூர்த்தி, மஞ்சுளா, சுசீலா, காளிமுத்து, பத்ரகாளி , மாரிமுத்து, ரகத செல்வி ஆகிய 7 பேரின் வீடுகளிலும் பரவியது.

    தீ விபத்து குறித்து சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினார். சுமார் 1½ மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் தடுத்து அணைக்கப்பட்டது.

    இருப்பினும் இந்த தீ விபத்தில் குடிசை வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், டி.வி. மற்றும் தளவாட சாமான்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. மேலும் சிலர் வீடுகளில் வைத்திருந்த நகை-பணம் மற்றும் ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் எரிந்து சேதமானது.  

    தீ விபத்து பற்றி சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் கொசுவர்த்தி சுருளில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சீர்காழி தாசில்தார் பாலமுருகன், நகராட்சி கமி‌ஷனர் அஜிதா பர்வின் ஆகியோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரணமாக அரிசி, வேட்டி-சேலை ஆகிய நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினர்.

    இதேபோல் சீர்காழி எம்.எல்.ஏ. தனது சொந்த பணத்தில் தீ விபத் தில் பாதிக்கப்பட்ட 8 குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார்.


    Next Story
    ×