search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவடி அருகே வெள்ளானூர் ஏரி உடைந்தது
    X

    ஆவடி அருகே வெள்ளானூர் ஏரி உடைந்தது

    சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளானூர் ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இது பற்றி அறிந்ததும் ஆவடி தாசில்தார் பாபு, பொதுப் பணித்துறை அதிகாரி அசோகன் ஆகியோர் ஏரியை பார்வையிட்டனர்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த வெள்ளானூர், ஆரிக்க மேடு, கண்டிகையில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு வெள்ளானூர், மோரை, அலமாதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயம் செய்து வந்தனர். உபரி நீர் புழல் ஏரிக்கும் அனுப்பப்பட்டு வந்தது.

    கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் ஏரியில் குறைந்த அளவு தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளானூர் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    நேற்று இரவு ஏரி முழுவதும் நிரம்பியது. அப்போது ஏரியின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. உடனடியாக மணல் மூட்டைகள் போடப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டது.

    இதற்கிடையே இன்று காலையும் ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இது பற்றி அறிந்ததும் ஆவடி தாசில்தார் பாபு, பொதுப் பணித்துறை அதிகாரி அசோகன் ஆகியோர் ஏரியை பார்வையிட்டனர்.

    உடனடியாக ஆயிரம் மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு ஏரி உடைப்பு சரி செய்யப்பட்டது. சுமார் 70 ஊழியர்கள் கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஏரியில் நீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதி அடைந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை ஆறுதல் தருவதாக உள்ளது.

    இந்த மழை நீரை அதிகாரிகள் திட்டமிட்டு ஏரி, குளங்களில் தேக்கி வைக்க வேண்டும். அப்படியானால் தான் குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க முடியும்.

    இந்த சிறிய மழைக்கே ஏரி உடைந்து தண்ணீர் வீணாவது வேதனையாக உள்ளது. இது போல் மற்ற இடங்களிலும் ஏற்படாமல் இருக்க அனைத்து ஏரி- குளங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×