search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடிக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்
    X

    தமிழக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடிக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்

    தமிழக அரசு 5 ஆண்டுகள் என்ன 50 ஆண்டு காலம் நீடிக்கும் என கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
    கோபி:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு மற்றும் இலவச மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, பொது மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை, சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் ஆகியவை கோபியில் நடைபெற்றது.

    மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகாச்சலகுமார் வரவேற்றார்.

    மருத்துவ முகாமை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    கோபி தொகுதியை ஒரு பொற்கால தொகுதியாக அமைய பாடுபட்டு வருகிறேன். இந்த அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையில் தூர்வாரி தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.

    இந்த அரசு நீடிக்காது என பேசி வருகிறார்கள். 5 ஆண்டுகள் என்ன 50 ஆண்டு காலம் இந்த அரசு நீடிக்கும். உங்களுடைய அரசாக இருந்து சரித்திரத்தை படைக்க உள்ளது.

    மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை பிரதமர் மோடியே பாராட்டி உள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. அரசு ரேசன் கடையில் பொருட்களை வாங்க ஸ்மார்ட் கார்டுகளை வழங்கியுள்ளது. அதே போல மாணவ- மாணவிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க உள்ளோம்.

    பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளையும் தொடங்க உள்ளோம். இனி மேல் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் செயல்படும் என்பதில் அய்யமில்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ரூ.26,892 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு முன்னேறுவதற்கு கல்வி தான் முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×