search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரர்கள் ஊதிய ஒப்பந்தம்: ஷிகர் தவான், புவனேஸ்வர் குமாருக்கு பின்னடைவு- முரளி விஜய் நீக்கம்
    X

    வீரர்கள் ஊதிய ஒப்பந்தம்: ஷிகர் தவான், புவனேஸ்வர் குமாருக்கு பின்னடைவு- முரளி விஜய் நீக்கம்

    இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களின் ஊதிய ஒப்பந்த விவரத்தை வெளியிட்டுள்ளது. ‘ஏ’ பிளஸ் பிரிவில் இடம் பிடித்திருந்த தவான், புவி கீழே இறக்கப்பட்டுள்ளனர். #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணி வீரர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை தரம் வாரியாக வெளியிடும். ஏ பிளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஊதியம் வழங்கி வருகிறது. மிக சிறப்பாக விளையாடும் வீரர்கள் ‘ஏ பிளஸ்’ பிரிவு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.7 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது.

    அதேபோல் ‘ஏ’ பிரிவுக்கு ரூ.5 கோடியும், ‘பி’ பிரிவுக்கு ரூ.3 கோடியும், ‘சி’ பிரிவுக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு போட்டிகளுக்கும் தனியாக சம்பளம் வழங்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டுக்கான (2018 அக்டோபர் முதல் 2019 செப்டம்பர் வரை) இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் ‘ஏ பிளஸ்’ பிரிவில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார் இடம் பெற்று இருந்தனர். இந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தரம் இறக்கம் செய்யப்பட்டு ‘ஏ’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இளம் விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பந்த், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் ‘ஏ’ பிளஸ் பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டு உள்ளனர்.

    கடந்த ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் முரளி விஜய் இந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அவர் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என தெரிகிறது.

    இதேபோல சுரேஷ் ரெய்னா, பார்த்தீவ் பட்டேல், ஜெயந்த் யாதவ், அக்சர் பட்டேல், கருண் நாயர் ஆகியோரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்திய மகளிர் அணியில் ‘ஏ’ கிரேடு பிரிவில் (ரூ.50 லட்சம்) மிதலி ராஜ், ஹர்மன் பிரித்கவுர், மந்தனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ‘பி’ பிரிவில் (ரூ.30 லட்சம்) எக்தா பிஸ்ட், கோஸ்வாமி, ஷிக்ஹா பாண்டே, தீட்சி சர்மா, ரோட்ரிக்ஸ் ஆகியோர் உள்ளனர்.
    Next Story
    ×