search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றியது இந்திய மகளிர் அணி
    X

    தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றியது இந்திய மகளிர் அணி

    தென்ஆப்ரிக்கா மகளிர் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என கைப்பற்றியது. #INDWvSAW #SAWvINDW

    ஜொகன்னஸ்பர்க்:

    தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. டி20 தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டி20 போட்டி தென்ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. நான்காவது போட்டி மழையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் டேன் வான் நெய்கெர்க் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய நேரப்படி 4:30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் மழையின் காரணமாக சற்று தாமதமாக தொடங்கியது.



    இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மந்தனா 13 ரன்னில் ஆட்டமிழக்க, ஜெமிமா ரொட்ரிகஸ் மிதாலி ராஜ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர். மிதாலி ராஜ் அரைசதம் கடந்தார். அவர் 50 பந்துகளில் 62 ரன்கள் (8 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

    எதிர்முனையில் சிறப்பாக விளையாடிவந்த ஜெமிமா 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்மன்பிரீத் கவுர் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் மரிஜேன் கப், அயபோங்கா காகா, ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



    இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக டேன் வான் நெய்கெர்க், லிச்செல் லீ ஆகியோர் களமிறங்கினர். நெய்கெர்க் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த சூன் லுயஸ் 5 ரன்னிலும், லிச்செல் லீ 3 ரன்னிலும், மிக்னன் டு பிரீஸ் 17 ரன்களிலும், நாடின் டி க்லெர்க் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது தென்ஆப்ரிக்கா அணி 44 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டை இழந்து தடுமாறியது.



    அதன்பின் சோலி ட்ரியான், மரிஜேன் கப் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். சோலி ட்ரியான் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்களும் பெரிய அளவில் ரன் எடுக்க தவறினர். மரிஜேன் கப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்ஆப்ரிக்கா அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி பந்துவீச்சில் ஷிக்கா பாண்டே, ருமேலி தார், ராஜேஷ்வரி கயாக்வாத் ஆகியோர் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என கைப்பற்றியது.
     
    முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-1 என கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. #INDWvSAW #SAWvINDW
    Next Story
    ×