search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Cricket"

    • ஸ்மிருதி மந்தனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
    • பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

    27 வயதான மந்தனா மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் 'இன்ஸ்டாகிராமில் உங்களை நிறைய ஆண்கள் பின்தொடர்கிறார்கள். உங்களது கணவர் எப்படி இருக்க வேண்டும், எந்தவிதமான குணாதிசயங்களை கொண்டவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார்.


    அதற்கு சிரித்தபடி மந்தனா அளித்த பதிலில், 'இதுபோன்ற கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் நல்ல பையனாக இருக்க வேண்டும். என் மீது அக்கறை உடையவராக, என் விளையாட்டை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும்.

    நான் விரும்பும் இரண்டு குணங்கள் இது தான். நான் விளையாட்டில் இருப்பதால் அவரிடம் அதிக நேரம் செலவிட முடியாது. அதை புரிந்துகொண்டு என் மேல் மிகுந்த அன்பு காட்டுபவராக இருக்க வேண்டும். இது தான் நான் முக்கியமாக பார்க்கக்கூடியது' என்று கூறினார்.

    • மும்பையில் இன்று நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • ஆஸ்திரேலியா டெஸ்டில் தடுமாற்றம் கண்டாலும் குறுகிய வடிவிலான போட்டிகளில் அசுர பலமிக்கது.

    மும்பை:

    அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது.

    அடுத்ததாக 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் மும்பையில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

    ஆஸ்திரேலியா டெஸ்டில் தடுமாற்றம் கண்டாலும் குறுகிய வடிவிலான போட்டிகளில் அசுர பலமிக்கது. 50 ஓவர் உலகக் கோப்பையை 7 முறை கைப்பற்றி வாகை சூடியுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 50 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ள இந்தியா அதில் 40-ல் தோல்வியை சந்தித்துள்ளது. 10-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது. அதுவும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக ஆடிய 7 ஆட்டங்களில் இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியிருக்கிறது.

    ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இந்த முறை முட்டுக்கட்டைபோடும் உத்வேகத்துடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஆல்-ரவுண்டர்கள் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா தாக்குர், சுழற்பந்து வீச்சாளர்கள் சினே ராணா, ஸ்ரேயங்கா பட்டீல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தயாராகி வருகிறார்கள்.

    இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜூம்தர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'ஆஸ்திரேலியா சிறந்த ஒரு அணி. நீண்ட காலமாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதனால் தான் அவர்கள் 50 ஓவர் போட்டியிலும் சரி, 20 ஓவர் போட்டியிலும் சரி நிறைய உலகக் கோப்பைகளை வென்று இருக்கிறார்கள். அதே சமயம் நாங்கள் எங்களது பலத்துக்கு தக்கபடி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். மேலும் உலகின் மிகச்சிறந்த ஒரு அணிக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு நாளிலும் நாங்கள் முன்னேற்றம் காண்பதை எதிர்நோக்கி உள்ளோம். அதை செய்தாலே எனக்கு மகிழ்ச்சி தான்' என்றார்.

    ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிசா ஹீலி, கிம் கார்த், லிட்ச்பீல்டு, தாலியா மெக்ராத், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், மேகன் ஸ்கட் என்று தரமான வீராங்கனைகளுக்கு பஞ்சமில்லை. டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் வரிந்து கட்டுவார்கள். பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ரிச்சா கோஷ் 52 ரன்னிலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்னிலும் வெளியேறினர்.
    • தீப்தி வர்மா 70 ரன்னிலும் பூஜா 33 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    மும்பை:

    இந்தியா- ஆஸ்திரேலிய பெண்கள் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 77.4 ஓவர் களில் 219 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பூஜா வஸ்ட்ராகர் 4 விக்கெட்டும், சினே ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து இருந்தது. ஸ்மிருதி மந்தனா 43 ரன்னுடனும், சினே ரானா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 21-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி மந்தனா அரை சதம் அடித்தார். ஷபாலி வர்மா 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ரானா 9 ரன்னிலும் மந்தனா 74 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார்.

    ரிச்சா கோஷ் 52 ரன்னிலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த கவுர் 0, யாஷிகா 1 என வெளியேற இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து தீப்தி வர்மா - பூஜா ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

    இறுதியில் 2-ம் நாள் முடிவில் இந்திய பெண்கள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 376 ரன்கள் எடுத்தது. தீப்தி வர்மா 70 ரன்னிலும் பூஜா 33 ரன்னிலும் களத்தில் இருந்தனர். 

    • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • முதல் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது.

    மும்பை:

    இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது. தீப்தி ஷர்மா 60 ரன்களுடனும், பூஜா வஸ்த்ரகர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக லாரன் பெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் கவுர் 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஒரு ரன் எடுக்க முயற்சித்த அவர் பாதி தூரம் ஓடினார். மறுமுனையில் இருந்த வீராங்கனை ரன் வேண்டாம் என்று கூறியதால் கவுர் கிறீசுக்கு திரும்பினார். கிறீஸ் அருகே வந்த அவர் பேட்டை கோட்டிற்கு முன் வைத்தார். ஆனால் பேட் எதிர்பாராதவிதமாக பிட்சில் சிக்கி கொண்டது. இதனால் அவர் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் எந்தவித சிரமமும் இன்றி கிறீசுக்குள் வந்திருக்கலாம். ஆனால் அவர் மெத்தனமாக செயல்பட்டதே இந்த ரன் அவுட்டுக்கு காரணமாக அமைந்ததது.

    இதேபோல மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியிலும் கவுர் இதேபோல ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • இந்தியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

    இந்தியா- இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து, இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 76 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடியது.

    இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட்டின் போராட்டத்தால் ஒரு வழியாக மூன்று இலக்கத்தை கடந்தது. ஹீதர் நைட் 52 ரன்களில் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்கா இஷாக், ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், அமன்ஜோத் கவுர் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மிர்தி மந்தனா 48 ரன்களும் (48 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களும் விளாசினர்.

    ஆனால் இந்த வெற்றி இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை தனக்குரியதாக்கி விட்டது.

    அடுத்து இவ்விரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தொடங்குகிறது.

    • பேட்டிங் மற்று பந்து வீச்சில் அசத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
    • இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

    வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இதையடுத்து நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து வங்கதேசம் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரியா புனியா ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் பிரியா புனியா 7 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 36 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய யாஷ்டிகா பாதியா 15 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் களம் இறங்கி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்னும், ரோட்ரிக்ஸ் 86 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஹார்லீன் தியோல் 25 ரன், தீப்தி சர்மா 0 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

    இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது.

    தொடக்க வீராங்கனைகளான முர்ஷிதா காதுன்12, ஷர்மின் அக்தர் 2, லதா மோண்டல் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். இதனால் 38 ரன்கள் எடுப்பதற்குள் வங்காளதேசம் அணி 38 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஃபர்கானா ஹோக் - ரிது மோனி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபர்கானா ஹோக் 47 ரன்னில் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன அடுத்த ஓவரிலேயே ரிது மோனியும் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற 35.1 ஓவரில் வங்காளதேசம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது. இந்திய தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங் மற்று பந்து வீச்சில் அசத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

    • இந்திய வீராங்கனைகளான புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
    • கவூர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.

    மிர்புர்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்திய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

    இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்தது.

    இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீராங்கனைகளாக புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.


    கேப்டன் கவுர் 48 ரன்கள் எடுத்த நிலையில் 1 ரன் எடுக்க முயற்சித்த போது பேட் ஸ்லிப்பாகி கீழே விழுந்தார். இதனால் வலியால் துடித்த அவர் சிறிது நேரத்தில் களத்தில் இருந்து வெளியேறினார். அவர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார். காயத்தை பொறுத்து அவர் மீண்டும் களத்தில் இருங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 மகளிர் உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அவர் 2 ரன்கள் எடுக்க கிரிசை நோக்கி பேட்டை ஊன்றிய போது எதிர்பாரதவிதமாக பேட் தரையில் சிக்கி கொண்டது. அதனால் அவர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அதேபோல இந்த முறையும் நடந்துள்ளது.

    • ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி சாதனை படைத்துள்ளது.
    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 164 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக காஞ்சனா 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷவாலி வர்மா-மந்தானா ஆடினர். 25.4 ஓவரில் இந்திய அணி விக்கெட் ஏதும் விட்டுக் கொடுக்காமல் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷவாலி வர்மா 71 ரன்னிலும் மந்தனா 94 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி சாதனை படைத்துள்ளது. விக்கெட் இழப்பின்றி அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் சாதனையை இந்திய பெண்கள் அணி தகர்த்தி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 164 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை இந்திய பெண்கள் அணி முறியடித்துள்ளனர்.


    இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்திய பெண்கள் அணி விக்கெட் இழப்பின்றி 146 ரன்கள் எடுத்ததே அதிக ரன்னாக இருந்தது.

    • இந்திய அணியின் கேப்டன் கவூர் 44 ரன்கள் அடித்தார்.
    • இலங்கை அணி தரப்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிலாக்ஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷவாலி வர்மா-மந்தனா ஜோடி ஆடினர். மந்தனா 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த பாட்டியா 1 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் கவூர் - ஷவாலி வர்மாவுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிக்க ஆரம்பித்தனர்.

    1 பவுண்டரி 2 சிக்சர் அடித்த ஷவாலி வர்மா 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல்- கவூர் ஜோடி சேர்ந்து ஆடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவூர் 44 ரன்னில் வெளியேற சிறிது நேரத்தில் ஹர்லீன் தியோல் 34 ரன்னில் வெளியேறினார்.

    இந்திய அணி 103 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை பறிக்கொடுத்திருந்தது. அடுத்து வந்த ரிச்சா கோஷ் 6 ரன்னில் வெளியேறினார். 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் தீப்தி வர்மா- பூஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

    இந்திய அணி 38 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக கவூர் 44 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ஜூலை 4-ந் தேதி நடக்கிறது.

    • இலங்கை அணியில் நிலாஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார்.
    • இந்திய அணி தரப்பில் தீப்தி வர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன் படி இலங்கை அணி வீராங்கனை களமிறங்கினார். கேப்டன் சமாரி அதபத்து 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹன்சிமா கருரத்ணே 0 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஹசினி பேரேரா-மாதவி ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை தீப்தி வர்மா பிரித்தார். இலங்கை அணி 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசினி எல்பிடபிள்யூ முறையில் வெளியேற சிறிது நேரத்தில் கவிஷா தில்ஹாரி கவூர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    அடுத்ததாக நிலாக்ஷி டி சில்வா பொறுப்புடன் விளையாடினார். ஒரு முனையில் இவர் நிலைத்து ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. மாதவி 28, அனுஷ்கா சஞ்சீவனி 18, ஓஷதி ரணசிங்கே 8, ராஷ்மி 7, ரணவீரா 12 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க இலங்கை அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிலாஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி தரப்பில் தீப்தி வர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது.

    ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக 105 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் மிதலி ராஜ். #MithaliRaj
    இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இந்தியா ‘ஏ’ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீராங்கனையும், இந்திய பெண்கள் அணியின் அனுபவம் வாயந்தவரும் ஆன மிதலி ராஜ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்தில் அரைசதம் அடித்த, மிதலி ராஜ், 59 பந்தில் சதம் அடித்தார். அவர் 61 பந்தில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் டி20 போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஸ்மிரிதி 102 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. அதை தற்போது மிதலி ராஜ் முறியடித்துள்ளார்.
    மும்பையில் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா ‘ஏ’ அணியை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா ‘ஏ’. #INDAW #AUSAW
    இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன்பின் வந்த மெக்ராத் (58), கிரஹாம் (48), ஸ்டேலன்பெர்க் (47) சிறப்பாக விளையாடி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா ‘ஏ’.

    பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.

    தொடக்க வீராங்கனை புனியா 4 ரன்னில் வெளியேற, அதன்பின் வந்த வைத்தியா, மற்றொரு தொடக்க வீராங்கனை ரவுத் ஆகியோர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். எஸ் பாண்டே 42 ரன்களும், ப்ரீத்தி போஸ் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 46.2 ஓவரில் 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ஏ 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது போட்டி 17-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 19-ந்தேதி மும்பையில் நடக்கிறது.
    ×