search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி
    X

    இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி

    • இங்கிலாந்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • இந்தியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

    இந்தியா- இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து, இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 76 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடியது.

    இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட்டின் போராட்டத்தால் ஒரு வழியாக மூன்று இலக்கத்தை கடந்தது. ஹீதர் நைட் 52 ரன்களில் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்கா இஷாக், ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், அமன்ஜோத் கவுர் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மிர்தி மந்தனா 48 ரன்களும் (48 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களும் விளாசினர்.

    ஆனால் இந்த வெற்றி இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை தனக்குரியதாக்கி விட்டது.

    அடுத்து இவ்விரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தொடங்குகிறது.

    Next Story
    ×