என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: சாதனை படைத்த தீப்தி சர்மா
- 5 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
- 5-வது போட்டியில் இந்தியாவின் தீப்தி சர்மா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது.
இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
இந்த போட்டியில் தீபதி சர்மா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா வீராங்கனை மேகன் ஷட் சாதனையை தீப்தி சர்மா முறியடித்துள்ளார். அவர் 133 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை பட்டியலில் தீப்தி ஷர்மா 152 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து மேகன் ஷட் (ஆஸ்திரேலியா) 151 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். 3 முதல் 5 இடங்கள் முறையே நிடா டார் (பாகிஸ்தான்) 144 விக்கெட்டுகள், ஹென்றிட் இஷிம்வே (ருவாண்டா) 144 விக்கெட்டுகள் சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து) 142 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.






