search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி சதத்தால் இலங்கை வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    விராட் கோலி சதத்தால் இலங்கை வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    விராட் கோலியின் அதிரடி சதத்தால் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா
    கொல்கத்தா:

    இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் 2 நாள் ஆட்டமும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. 32.5 ஓவர்கள் மட்டுமே இரண்டு நாளில் வீசப்பட்டது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. ஹெராத் 67 ரன்னும், மேத்யூஸ் 52 ரன்னும், திரிமானே 51 ரன்னும் எடுத்தனர். முகமது‌ ஷமி, புவனேஷ்வர் குமார் தலா 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. ராகுல், தவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து இருந்தது. தவான் 94 ரன் எடுத்த நிலையில் ‘அவுட்’ ஆனார். ராகுல் 73 ரன்னுடனும், புஜாரா 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 49 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் ‘அவுட்’ ஆனார். அவர் 79 ரன்னில் லக்மல் பந்தில் போல்டு ஆனார். 125 பந்தில் 8 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 192 ஆக இருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் கேப்டன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். 47.4-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்னை தொட்டது. புஜாரா 22 ரன்கள் எடுத்த நிலையில் லக்மல் பந்தில் ‘அவுட்’ ஆனார். அடுத்து வந்த ரகானே டக் அவுட் மூலம் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலியுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடினார். 41 பந்து சந்தித்த ஜடேஜா 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.



    5-வதுநாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 41 ரன்னுடனும், அஸ்வின் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் விராட் கோலி அரைசதம் அடித்தார். 80 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

    மறுமுனையில் அஸ்வின் 7 ரன்னிலும், சகா 5 ரன்னிலும் அவுட் ஆக, விராட் கோலி அதிரடியாக விளையாட தொடங்கினார். அடுத்து வந்த புவனேஸ்வர் குமார் 8 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    9-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் மொகமது ஷமி ஜோடி சேர்ந்தார். ஷமி அதிரடியாக விளையாட, விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறினார். அதேவேளையில் டிக்ளேர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே கோலி ஆடினார்.

    89-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கி விராட் கோலி சதம் அடித்தார்அத்துடன் இந்தியா 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். விராட் கோலி 119 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 104 ரன்கள் எடுத்தும், ஷமி 11 பந்தில் 12 ரன்கள் எடுத்தும் அவுட்டாகாமல் இருந்தனர்.



    2-வது இன்னிங்சில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ததால், 230 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×