search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஒப்பந்த விவகாரம் - மோடியிடம் விசாரணை நடத்த ராகுல் கோரிக்கை
    X

    ரபேல் ஒப்பந்த விவகாரம் - மோடியிடம் விசாரணை நடத்த ராகுல் கோரிக்கை

    ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். #RahulGandhi #PMModi #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விதிகளை மீறி பிரதமர் மோடி தலையிட்டதாகவும் இதனால் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி வருகிறார்.

    இந்த நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் வைக்கப்பட்டிருந்த ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஆவணங்கள் திருடு போய் விட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறி உள்ளது. அப்படி திருடப்பட்ட ஆவணங்களின் தகவல்கள்தான் ஒரு ஆங்கில நாளிதழில் வெளியானது என்றும் மத்திய அரசு கூறியது.

    இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகையில், “பாதுகாப்புத் துறையிடம் இருந்து ரபேல் ஆவணங்கள் திருடு போனதாக கூறுவது வெட்கக்கேடானது. ஆவணங்களை காக்க முடியாத இவர்கள் எப்படி நாட்டு மக்களை காப்பாற்றுவார்கள்” என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

    ரபேல் ஆவணம் திருடு போனது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ராகுல் கூறியதாவது:-

    ரபேல் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடியை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்த ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடு போய் விட்டதாக சொல்கிறார்கள்.

    ஆனால் உண்மையில் இந்த விவகாரத்தில் பா.ஜனதா அரசு நாடகம் ஆடுகிறது. ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடப்பட்டதாக சொல்வது மோடி அவிழ்த்து விட்டுள்ள புதிய பொய் பிரசாரமாகும்.

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் பெற தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு பிரதமர் மோடி நேரடியாக உதவிகள் செய்துள்ளார். இதன் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலை திறமையாக மறைக்கவே இப்போது ஆவணங்கள் திருடப்பட்டு விட்டதாக கதை சொல்கிறார்கள்.

    இந்த ஆவணங்கள் இருந்தால் பிரதமர் மோடி செய்துள்ள முறைகேடுகள் அம்பலமாகி விடும். எனவே திருடு போய் விட்டது என்கிறார்கள். பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள ஆவணங்கள்தான் மாயமாகி உள்ளன.

    ரபேல் போர் விமான ஒப்பந்தங்களை ஆய்வு செய்ததில் அதில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால்தான் ரபேல் ஒப்பந்த விசாரணைக்கு தொடர்ந்து மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி திட்டமிட்டு தலையிட்டு முடிவுகளை எடுத்துள்ளார்.

    எனவே ரபேல் ஆவணங்கள் திருடு போனது பற்றி விசாரிப்பதற்கு முன்பு முதலில் இந்த முறைகேடுகள் பற்றி பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் காணாமல் போன வி‌ஷயத்தில் மீடியா மீது விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு சொல்கிறது.

    ஆனால் அதற்கு முன்பு ரபேல் ஒப்பந்தத்தால் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்தது பற்றி விசாரிக்க வேண்டும். இந்த ஊழலில் தொடர்புடைய ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.



    பிரதமர் மோடி “பைபாஸ் சர்ஜரி” நடத்தி நேரடியாக தலையிட்டு இந்த ஊழலை செய்துள்ளார். முதலில் அவரிடம்தான் விசாரிக்க வேண்டும்.

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் திருடு போய் விட்டதாக கூறுவது போலத்தான் 2 கோடி வேலை வாய்ப்புகளும் மாயமாகி உள்ளன. இதனால் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை உருவாகியுள்ளது.

    ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அந்த ஆவணமும் மறைந்து விட்டது.

    அதுபோல விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். அதுவும் மாயமாகி விட்டது.

    பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. விவகாரமும் மாயமாகி உள்ளது. தற்போது ரபேல் போர் விமான ஒப்பந்த ஆவணமும் மாயமாகி விட்டது.

    காங்கிரஸ் கட்சியை பார்த்து பாகிஸ்தானின் போஸ்டர்பாய் என்று மோடி கிண்டல் செய்கிறார். ஆனால் உண்மையில் அவர் தான் போஸ்டர்பாயாக இருக்கிறார். தனது பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமரை அழைத்தது அவர்தான்.

    பதான்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தானை விசாரணைக்கு அனுமதித்தது அவர்தான். அதோடு பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் செரீப்புக்கு அந்த நாட்டுக்கே சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்படிப்பட்ட அவர்தான் பாகிஸ்தானின் போஸ்டர்பாயாக இருக்கிறார்.

    இவ்வாறு ராகுல் கூறினார். #RahulGandhi #PMModi #RafaleDeal


    Next Story
    ×