search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயார் - டெல்லியில் மம்தா பானர்ஜி ஆவேசம்
    X

    நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயார் - டெல்லியில் மம்தா பானர்ஜி ஆவேசம்

    மோடி நாயகமாக மாறிவிட்ட நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற எனது உயிரையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #readytosacrifice #sacrificemylifemy #sacrificeforcountry #MamataBanerjee
    புதுடெல்லி:

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகிறார்கள்.

    சென்னையில் நடைபெற்ற மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்புவிழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்தான் ராகுல்காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்பின்னர், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தினார். இதில் நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 19-ம் தேதி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளை திரட்டி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார்.

    இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் சிங்வி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தது.

    இதற்கிடையே ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார். இதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். மொத்தம் 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர். 

    இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் திடலில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கிய இந்த பொதுக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மிகவும் ஆவேசமாக தாக்கிப் பேசினார்.

    ‘கொல்கத்தா போலீஸ் கமிஷனரை கைது செய்வதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகளை ஏவிவிட்ட இந்த அரசைப்போன்ற மிகவும் கீழ்த்தரமான செயல்புரிந்த ஒரு அரசாங்கத்தை நான் இதுவரை பார்த்ததில்லை.

    ஷோலே இந்திப்பட வில்லன் கப்பர் சிங் பெயரை கேட்டால் எல்லோருக்கும் பயம் வரும். இங்கே டெல்லியில் மோடி, அமித் ஷா என்று இரண்டு கப்பர் சிங் இருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியின் கடைசிநாள் இன்றுடன் முடிந்து விட்டது.

    இந்தியாவில் ஜனநாயகம் இன்று மோடிநாயகமாக மாறிவிட்டது. எமர்ஜன்சி என்னும் நெருக்கடி நிலையைவிட மோசமான நிலைமை தற்போது நீடித்து வருகிறது. நாட்டுக்காக எனது கட்சியையும், உயிரையும் தியாகம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். 

    மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி மீண்டும் வராதவாறு தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக போராடும்’ என்று தெரிவித்தார். #readytosacrifice #sacrificemylifemy #sacrificeforcountry #MamataBanerjee
    Next Story
    ×