search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - சந்திரபாபு நாயுடு, மாயாவதி கருத்து
    X

    வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - சந்திரபாபு நாயுடு, மாயாவதி கருத்து

    மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து பாராளுமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என சந்திரபாபு நாயுடு, மாயாவதி கூறியுள்ளனர். #Mayawati
    புதுடெல்லி:

    ‘இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யமுடியும்’ என்று அமெரிக்காவை சேர்ந்த மின்னணு தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜா குற்றம் சாட்டினார்.

    இதனால் தான் 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்றது என்றும் கூறி இருக்கிறார். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி, தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்க வேண்டும். 2014 பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்து பா.ஜனதா வெற்றிபெற்றதாக லண்டனில் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    உடனடியாக பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் மாறவேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் விரைவில் ஒன்றுகூடி, வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்தும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் எந்திரம் தொடர்பாகவும் கலந்து ஆலோசிப்போம்.

    நாங்கள் நவீன தொழில் நுட்பத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது. இப்போது 120 நாடுகளில் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படவில்லை. 20 நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வாக்கு எந்திரங்களை நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

    இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

    பகுஜன் சமாஜ் வாடி கட்சி தலைவர் மாயாவதி கூறியிருப்பதாவது:-

    வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்கள், அதன் மீதான சந்தேகத்தை மேலும் வலுவாக்கி உள்ளது. எனவே எதிர்காலத்தில் நடக்க உள்ள அனைத்து தேர்தல்களையும் வாக்குச்சீட்டு முறையில் நடத்துவது சிறப்பாக இருக்கும். குறிப்பாக பாராளுமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்.



    வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களால் பா.ஜனதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பா.ஜனதாவின் சதியை இந்த தகவல் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன. இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் விதமாக பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. எனவே, தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    லண்டனில் வாக்குப்பதிவு குறித்து மின்னணு தொழில் நுட்ப நிபுணர் சையது சுஜா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபலும் கலந்து கொண்டார். எனவே வாக்குப்பதிவு எந்திரம் பற்றிய குற்றச்சாட்டு காங்கிரஸ் சதி என்று பா.ஜனதா விமர்சனம் செய்தது. இதற்கு பதில் அளித்து கபில்சிபல் கூறிய தாவது:-

    லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது நானும் பங்கேற்றது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான அஷிஷ்ரேயின் தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே இதில் கலந்து கொண்டேன்.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. நமது நாட்டின் ஜனநாயகம் நிலைக்க இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    யாராவது குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அவை உண்மையா, அல்லது பொய்யா என்பது குறித்து முதலில் விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும், சட்டங்களும் கூறுகின்றன. இப்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்றால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது உண்மை என்றால் மிக தீவிரமான வி‌ஷயம். இந்த விவகாரத்தில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ள கருத்துக்கள் பொறுப்பற்றவை. சிறுபிள்ளை தனமானவை. இதுபோன்ற கருத்துக்கள் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

    இவ்வாறு கபில்சிபல் கூறினார். #Mayawati #ChandrababuNaidu
    Next Story
    ×