search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவிலக்கை மகிமைப்படுத்தும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பங்கேற்பா? - அரசு விளக்கம்
    X

    மாதவிலக்கை மகிமைப்படுத்தும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பங்கேற்பா? - அரசு விளக்கம்

    பெண்களின் மாதவிலக்கை மகிமைப்படுத்தும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பார் என்று வெளியான தகவலுக்கு அம்மாநில அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். #AarpoAarthavam #Hurraymenses #KeralaCM #celebratingmenstruation #Sabarimala #AyyappaTemple
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பையடுத்து, ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற பல பெண்களை சில அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றுவது எங்கள் அரசின் கடமை. தரிசனத்துக்காக வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பகிரங்கமாக அறிவித்தார்.

    தரிசனத்துக்காக வரும் பெண்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக மாநில அரசின் ஆதரவுடன் கேரளாவின் பல மாவட்டங்களை உள்ளடக்கி தென்முனை எல்லைப்பகுதியில் இருந்து வடமுனை எல்லைப்பகுதி வரை சுமார் 620 கிலோமீட்டர் தூரத்துக்கு மனித மதில் சுவர் நிகழ்ச்சியும் ஜனவரி முதல் தேதியன்று நடைபெற்றது. இதில் சுமார் 35 லட்சம் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.



    மாதவிலக்கு காலத்தில் அசுத்தமானவர்கள் என்று கருதப்படுவதால்தான் பெண்களை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க ஒருதரப்பினர் மறுத்து வருகின்றனர். இந்த மனப்போக்கை தகர்த்தெறிய வேண்டும் என கருதிய ஒரு பிரிவினர் மாதவிலக்கை மகிமைப்படுத்தும் 'ஆர்ப்போ ஆர்த்தவம்’ என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    கொச்சி மாவட்டத்தில் இன்றும் நாளையும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 'ஆர்ப்போ ஆர்த்தவம்’ நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயன் பங்கேற்பார் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். இன்றைய நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார்.

    இந்நிலையில், நாளைய நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்பாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதற்கு இன்று பதிலளித்த அம்மாநில அரசின் உயரதிகாரிகள், ‘முதல் மந்திரி பினராயி விஜயன் நாளை 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவரது நிகழ்ச்சி நிரல் பட்டியலில் 'ஆர்ப்போ ஆர்த்தவம்’ இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் இடதுசாரி கொள்கையில் மிகதீவிரமான பற்றுள்ள பலவேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்கவுள்ளதால் இதில் கலந்து கொள்ளாமல் பினராயி விஜயன் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. #AarpoAarthavam #Hurraymenses #KeralaCM #celebratingmenstruation #Sabarimala #AyyappaTempl
    Next Story
    ×