search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பா.ஜ.க.வில் சேர முயற்சி - எடியூரப்பா தகவல்
    X

    கர்நாடகாவில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பா.ஜ.க.வில் சேர முயற்சி - எடியூரப்பா தகவல்

    கர்நாடகாவில் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலர் பாரதிய ஜனதாவில் சேருவதற்காக எங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக அக்கட்சி மாநில தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநில மதசார்பற்ற ஜனதா தளம் அரசில் காங்கிரஸ் மந்திரியாக இருப்பவர் டி.கே. சிவக்குமார். குமாரசாமி ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பக்கம் தாவி விடாமல் தடுத்து அவர்களை பத்திரமாக பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார்.

    தற்போது டி.கே. சிவக்குமார் மீது மத்திய அமலாக்க துறை, வருமான வரித்துறை போன்றவை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

    இதுசம்பந்தமாக அவரது சகோதரரும், பெங்களூரூ புறநகர் பகுதி எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் கூறும்போது, பாரதிய ஜனதா தலைவர்கள் சிலரின் தூண்டுதல் காரணமாக டி.கே. சிவக்குமார் மீது மத்திய ஏஜென்சிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அதன் மூலம் ஆட்சியை சீர்குலைக்க வைக்க முயற்சி நடக்கிறது என்று கூறினார்.


    இதேபோன்ற கருத்தை முதல்-மந்திரி குமாரசாமியும் தெரிவித்துள்ளார். அவர் கூறம்போது, எங்களது கூட்டணி கட்சி தலைவர்கள் மீது மத்திய அரசின் ஏஜென்சிகள் சில நடவடிக்கைகளை எடுக்கின்றன. இதன் மூலம் ஆட்சிக்கு தொல்லை கொடுக்க முயற்சிக்கிறார்கள். ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள் என்று கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் மாநில பாரதிய ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா கூறியதாவது:-

    இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலர் பாரதிய ஜனதாவில் சேருவதற்காக எங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.

    அவர்கள் எந்த நேரத்திலும் எங்கள் கட்சியில் வந்து சேரலாம். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், காங்கிரசார் ஏன் ஆட்சியை பற்றி கவலைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.  #Yeddyurappa
    Next Story
    ×