search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பிக்கையில்லா தீர்மானம் - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதிலடி
    X

    நம்பிக்கையில்லா தீர்மானம் - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதிலடி

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். #NoConfidenceMotion #PMModi #IndiaTrustsModi
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடந்தது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்தும், அதிமுக, சமாஜ்வாதி, திரிணாமுல், டிஆர்எஸ் ஆகிய கட்சிகளும் மத்திய அரசு மீது கலவையான விமர்சனத்தை முன்வைத்தும் பேசின.

    எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் பேரம் தொடங்கி பல்வேறு பிரச்சினைகளில் அவர் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுக்களை கூறினார்.

    இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து உரையாற்ற தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர். எனவே, இது நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை, எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடாகும்.

    அதிகப்படியான உறுப்பினர் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு நாங்கள் இங்கு வரவில்லை, மக்களின் ஆசிர்வாதத்தோடு வந்திருக்கிறோம். பெரும்பான்மையோடு இருப்பதால் இது பா.ஜ.க.வுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பாக இது உள்ளது.

    பிரதமர் இருக்கையில் யார் அமர வேண்டும் என்பதை நாட்டு மக்களே முடிவு செய்வார்கள். மக்களை தவிர வேறு யாரும் என்னை இந்த இருக்கையிலிருந்து எழுப்பவோ, உட்காரவைக்கவோ முடியாது.

    தேவையில்லாமல் நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் குழப்புகின்றன. ஊழல் மீது நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சிகளுக்கு கஷ்டமாக இருக்கிறது.

    தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தன் மீது நம்பிக்கை கிடையாது. தன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் அரசின் மீது எப்படி நம்பிக்கை வைப்பார்கள். ஆகவே, அரசியல் குழப்பத்தை உண்டாக்கி லாபம் அடைய காங்கிரஸ் முயற்சி செய்கிறது.

    முந்தைய ஆட்சியைக் காட்டிலும் வளர்ச்சித் திட்டங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் பாதுகாப்புக்கு நிறையத் திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் வைத்திருந்த கடனை அடைத்திருக்கிறோம்.

    முன்பு இருந்த யூரியா பற்றாக்குறை இப்போது கிடையாது, பயிர் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம், தொழில் தொடங்க 13 கோடி இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது, கடந்த 70 ஆண்டுகளாக இருளில் இருந்த 18,000 கிராமங்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும். ஆனால், ஆந்திராவை பிரித்து காங்கிரஸ் அம்மாநிலத்தின் அமைதியை குலைத்துவிட்டது. பா.ஜ.க ஆட்சியின் போது பிரிக்கபட்ட மாநிலங்களில் அத்தகைய குழப்பம் இல்லை.

    பா.ஜ.க ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் காங்கிரஸின் முயற்சி பலிக்காது. எனவே, 2024-ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.  #NoConfidenceMotion #PMModi  #IndiaTrustsModi #ModiLiesInParliament #ModiTrustVote
    Next Story
    ×