search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை
    X

    பண மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை

    பண மோசடி வழக்கு தொடர்பாக இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. #VijayMallya #MoneyLaundering
    புதுடெல்லி:

    பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் செலுத்தாமல் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    விஜய் மல்லையா மீது கடந்த ஆண்டு மத்திய அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை அவருக்கு சொந்தமான ரூ.9,890 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.

    இந்த நிலையில் 2005-2010-ம் ஆண்டுகளுக்கு இடையே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இந்திய வங்கிகள் கூட்டமைப்புக்கு ரூ.6,027 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக பாரத ஸ்டேட் வங்கி அமலாக்கத்துறையிடம் புகார் அளித்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை வாங்கிய கடனை போலியான பல்வேறு கம்பெனிகளில் விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம் சட்டவிரோதமான முறையில் மாற்றி இருப்பதை கண்டுபிடித்தது.

    இதைத்தொடர்ந்து விஜய் மல்லையா மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறை மும்பை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளது.

    அண்மையில் மத்திய அரசு தலைமறைவாக உள்ள பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது. இச்சட்டம் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது.

    மேலும், இந்த புதிய அவசர சட்டத்தின் கீழ், விஜய் மல்லையா மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட்டின் அனுமதியை பெறவும் அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது.  #VijayMallya #MoneyLaundering
    Next Story
    ×