search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா. ஜனதாவால் லல்லுபிரசாத் உயிருக்கு ஆபத்து- மகன் தேஜஸ்வி யாதவ் புகார்
    X

    பா. ஜனதாவால் லல்லுபிரசாத் உயிருக்கு ஆபத்து- மகன் தேஜஸ்வி யாதவ் புகார்

    பாரதீய ஜனதா சதியால் எனது தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மகன் தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார். #tejashwiyadav #bjp #lalu

    பாட்னா:

    ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் மீது கால்நடை தீவன ஊழல் தொடர்பாக 5 வழக்குகள் இருந்த நிலையில் 3 வழக்குகளில் அவருக்கு ஏற்கனவே ஜெயில் தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. நேற்று 4-வது வழக்கில் அவருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து லல்லுபிரசாத்தின் மகனும், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோர்ட்டின் தீர்ப்புக்கு நான் உரிய மதிப்பு அளிக்கிறேன். அதே நேரத்தில் பீகார் மக்களுக்கு எனது தந்தை அப்பாவி என்பது நன்றாக தெரியும்.

    பாரதீய ஜனதா மற்றும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கூட்டு சதி திட்டங்களுக்கு எனது தந்தை பலியாக்கப்பட்டு இருக்கிறார். பாரதீய ஜனதாவின் சதியின் காரணமாக எனது தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.


    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.

    இதுபற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மாநில துணை முதல்-மந்திரியுமான சுசில்குமார் மோடி கூறும்போது, லல்லுவின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. லல்லு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதினால் அவர் கோர்ட்டில் அப்பீல் செய்யலாம்.

    லல்லுபிரசாத்தை யாரும் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படாத நிலையில் அவருக்கு எந்த வகையில் அச்சுறுத்தல் வரப் போகிறது? என்று கூறினார்.

    மத்திய மந்திரி கிரிராஜ்சிங் கூறும்போது, லல்லுபிரசாத் மீது கால்நடை தீவன ஊழல் வழக்கு பதிவு செய்த போது, பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லை என்பதை ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர்கள் உணர வேண்டும் என்றார்.

    நேற்று லல்லுவுக்கு கோர்ட்டு மீண்டும் ஜெயில் தண்டனை வழங்கிய நிலையில் ராஞ்சி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் லல்லுபிரசாத்தை பாரதீய ஜனதா மூத்த தலைவரும், நடிகருமான சத்ருகன் சின்கா சந்தித்து பேசினார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் சுபோத்கான் சகாயும் அவரை சந்தித்தார்.

    லல்லுபிரசாத் ஜெயிலில் இருப்பது காங்கிரசுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் அனைத்து கட்சிகளையும் ஒரே கூட்டணிக்கு கொண்டு வர லல்லுபிரசாத் முயற்சித்து வந்தார். அவர் தேசிய அளவில் செல்வாக்கு பெற்ற தலைவர் என்பதால் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    அவர் ஜெயிலில் இருப்பதால் இந்த பணியை செய்வதற்கு தகுதியான தலைவர்கள் இல்லை. இது, காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    இது சம்பந்தமாக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கவுகாப் காத்ரி கூறும்போது, லல்லுபிரசாத் வெளியே இருந்திருந்தால் நிச்சயம் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்குவார். அவருடைய மகன் கட்சியில் சிறப்பாக செயல்பட்டாலும் அவருக்கு போதிய அனுபவம் இல்லை என்று கூறினார்.

    இதற்கிடையே தேஜஸ்வி யாதவ் நேற்று ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் அவசர கூட்டத்தை கூட்டினார். அதில், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #tamilnews #tejashwiyadav #bjp #lalu

    Next Story
    ×