search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்
    X

    மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

    நாளை தொடங்கும் மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    இந்த ஆண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாளை நடைபெறும் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.



    ஜனாதிபதி தனது உரையின் போது மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றி கோடிட்டு காட்டுவார் என்று தெரிகிறது. குறிப்பாக பின்தங்கிய, நலிவடைந்த பிரிவினர் சலுகைகள் பெறும் விதத்தில் அவருடைய உரை அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்வார்.

    2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழுமையாக தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால், அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக பல்வேறு சலுகைகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.



    இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறும். நாளை தொடங்கும் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு நாடாளுமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்னர் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 5-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெறும்.

    நாளை தொடங்கும் மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×