search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் தற்கொலைக்கு வறட்சி காரணம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
    X

    விவசாயிகள் தற்கொலைக்கு வறட்சி காரணம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

    தமிழ்நாட்டில் விவசாயிகள் யாரும் வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். ஐகோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

    இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கும் வகையிலும், அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையிலும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை 2 வாரங்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவுபவராக மூத்த வக்கீல் கோபால் சங்கர் நாராயண் நியமிக்கப்பட்டார்.

    சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ்கன்னா அறிக்கையை தாக்கல் செய்தார். 70 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-



    மனுதாரர் குறிப்பிட்டு உள்ளதுபோல தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. இதுவரை 82 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளதாக தமிழக அரசிடம் தகவல் உள்ளது. அவர்கள் அனைவரும் பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்து இருக்கின்றனர்.

    உடல்நலக்குறைவு, வயது முதிர்வு, மாரடைப்பு போன்ற காரணங்களால் இந்த மரணங்கள் நேர்ந்துள்ளன. இதில் 30 பேர் தங்கள் குடும்ப பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்துள்ளார்கள் என்றும் தெரியவருகிறது.

    கடந்த 5 ஆண்டுகாலமாக கர்நாடக அரசு தமிழகத்துக்கு நியாயமாக தரவேண்டிய தண்ணீரை திறந்துவிடாத காரணத்தினால் காவிரி டெல்டா பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவியது. வறட்சி நிலை காணப்பட்டாலும் தமிழக அரசு எடுத்த பல்வேறு முக்கிய நடவடிக்கைகளால் தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்பட்டது.

    மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.39,565 கோடி வறட்சி நிவாரணம் கேட்டதில் மத்திய அரசு ரூ.1748.28 கோடி மட்டுமே அளித்தது. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் தமிழக அரசு மரணம் அடைந்த 82 விவசாயிகள் குடும்பத்துக்கும் மனிதாபிமான உணர்வோடு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது.

    3,48,323 விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.1,840 கோடி தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் எந்தவகையிலும் பாதிப்பு அடையாத வண்ணம் தமிழக அரசு அக்கறை எடுத்து செயல்பட்டுள்ளது. இதைத்தவிர கூட்டுறவு வங்கிகளில் ஏற்கனவே வாங்கிய கடனை முறையாக திருப்பிக்கொடுத்த விவசாயிகளுக்கு ரூ.4,227 கோடி மீண்டும் பயிர்க்கடன் அளித்திருக்கிறோம். இதனால் 7.62 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    பயிருக்கான நஷ்டத்திற்கு பயிர்க்காப்பீட்டுத் தொகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதத்துக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் இது கிடைத்துவிடும். இதுதவிர, தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு தமிழக அரசால் ரூ.623 கோடி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வகைகளிலும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    நேற்றைய விசாரணையில் மூன்றாவது நீதிபதியாக எம்.எம்.சந்தான கவுடர் அமர்வில் இடம்பெறாததால் இந்த மனுவை மே 2-ந் தேதி 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதி தீபக்மிஸ்ரா தெரிவித்தார்.
    Next Story
    ×