search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் - டிடிவி தினகரன்
    X

    திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் - டிடிவி தினகரன்

    தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் என்றைக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
    நெல்லை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பழனிசாமி-பன்னீர்செல்வத்தின் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கு என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது மக்களிடம் கேட்டேன்.

    அதேதான் தற்போது நடைபெறுகின்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களிலெல்லாம் கேட்கிறேன்.

    இன்னொரு ஆட்சி அமைப்பது தி.மு.க.வின் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது.

    தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் என்றைக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம். ரகசிய கூட்டுக்கு வாய்பே இல்லை என்பதற்குதான் இதனை கூறுகிறேன்.



    பழனிசாமி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் கண்டிப்பாக அதில் நாங்களும் சேர்ந்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்.

    ஏப்.18-ந் தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் பரிசுப் பெட்டகம் சின்னம் மக்களவை பொதுத் தேர்தலிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறப்போகிறது என்பதை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டதால் என்னை தாக்கி பேச வேண்டிய அவசியம் துரோகிகளுக்கு ஏற்பட்டுள்ளதால்தான் என்னை தாக்கி தற்போது பேசுகிறார்கள்.

    வாக்குக்கு பணம் கொடுப்பதாலேயே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற சரித்திரம் இதுவரை கிடையாது. இனிமேலும் வாக்களிக்க மாட்டார்கள்.

    எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தீவிரவாதம் என்பது கூடாது. அது ஓர் அழிவுச் சக்தி. அதிலெல்லாம் போய் மதத்தின் பெயரையெல்லாம் சேர்த்து யார் பேசினாலும் அது தவறு. எந்த மதத்தை சேர்ந்தவர்களையும் புண்படுத்துவதுப்போல யார் பேசினாலும் அது தவறு.

    தனிப்பட்ட ஒருவரோ, ஒரு குழுவோ தீவிரவாதிகளாக ஆவதால் அவர்கள் சார்ந்த மதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் என்ன சம்பந்தம். எல்லா மதங்களும் அன்பைதான் கற்பிக்கின்றன. எந்த மதமும் நீங்கள் தீவிரவாதி ஆகுங்கள், வேறு மதத்தை சேர்ந்தவர்களை அழியுங்கள் என்று சொல்வதில்லை.

    இன்னொரு மதத்தை தாழ்த்தி பேச வேண்டிய அவசியமும் கிடையாது. தேவையில்லாமல் மதத்தை சம்பந்தப்படுத்தி பேசுவதை எல்லோரும் தவிர்ப்பது நாட்டுக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×