search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்
    X

    கோவையில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்

    கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று இரவு கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். #BJP #PMModi

    கோவை:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடை பெறுகிறது.

    அதே தினத்தன்று தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 19 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    தேர்தல் பிரசாரம் ஓய இன்னும் 7 நாட்களே உள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் பிரதமர் மோடி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்ட பின் தமிழகத்தில் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடை பெறுகிறது.

    இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை 6.45 மணிக்கு மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அவரை வரவேற்கிறார்கள்.

     


    பின்னர் மோடி குண்டு துளைக்காத காரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா மைதானத்திற்கு வருகிறார். இரவு 7 மணி முதல் 8 மணி வரை அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    பின்னர் இரவு 8.15 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் - அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பேச உள்ள பொதுக்கூட்ட மேடை பாராளுமன்ற வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.

     


    பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. பொதுக்கூட்ட மேடையில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.

    போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் மைதானத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில் கோவை மாநகர போலீசார் மட்டுமின்றி வெளி மாவட்ட போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர்.

    பொதுக்கூட்ட மைதானம் மற்றும் விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா வளாகத்தில் பொதுமக்கள், கட்சியினர் வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    அவினாசி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் நேரத்தில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பின் பிரதமர் பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதால் லட்சக்கணக்கான தொண்டர்களை பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரட்டுகிறார்கள்.

    தேர்தல் அறிக்கை வெளியிட்ட அடுத்த நாள் கோவையில் மோடி பேச உள்ளது கட்சியினர் மற்றும் கூட்டணி நிர்வாகிகளிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை முதலே வெளியூர்களில் இருந்து பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் வர தொடங்கி விட்டனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். அதே கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் இன்று 2-வது முறையாக பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  #BJP #PMModi

    Next Story
    ×