search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை வெளிப்படுத்தியவருக்கு கமல் கட்சியில்  வாய்ப்பு
    X

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை வெளிப்படுத்தியவருக்கு கமல் கட்சியில் வாய்ப்பு

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் மூகாம்பிகை ரத்னம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன்முதலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    கமல்ஹாசன் பெயர் பட்டியலில் இல்லாதது பொது மக்களுக்கு ஆச்சர்யத்தையும் கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கமல் தென்சென்னை அல்லது ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராமநாதபுரத்தில் கமலுக்காக பிரசாரமே தொடங்கப்பட்டது.

    ஆனால் கமல் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார். இதுபற்றி கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘எங்களை பொறுத்தவரை அவர் முதல் அமைச்சர் வேட்பாளர். எனவே சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவார்.

    அவர் போட்டியிடுவேன் என்றுதான் கூறினார். ஆனால் நாங்கள் தான் வேண்டாம் என்று மறுத்தோம். இந்த தேர்தலில் அவர் எல்லா தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. மக்கள் மத்தியில் கட்சி பதிவதுதான் அவசியம்’ என்றனர்.

    கமல் கட்சியில் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரனுக்கு கோயம்புத்தூரில் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கோவை மக்களுக்கு பரிச்சயமானவர். டாக்டரான மகேந்திரன் விவசாயத்தில் பல புதுமைகளை புகுத்தி வெற்றி கண்டவர். கோவை பகுதியில் பிரபலமானவர். எனவேதான் அவரை நிறுத்தி இருக்கிறார்.

    கவிஞர் சினேகன் சிவகங்கையில் நிற்கிறார். சினேகனுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே உள்ள கரியாபட்டி. ஆனால் சிவகங்கை தொகுதிக்கும் சினேகன் பரிச்சயமானவர். ஒரு அமைப்பு தொடங்கி நடத்திய போது அந்த பகுதிகளில் தான் பிரபலமானார். எனவே சிவகங்கை தொகுதியை கேட்டு வாங்கியுள்ளார்.



    பொள்ளாச்சி தொகுதியில் ஆர்.மூகாம்பிகை ரத்னம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பெண்களுக்கான சமூக செயற்பாட்டாளரான இவர்தான் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன்முதலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

    பைக் ரேசரான இவர் பொள்ளாச்சி பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். கோவையில் இருந்து லண்டனுக்கு காரிலேயே பயணம் செய்து சாதனை புரிந்தவர். கடந்த 8-ந்தேதி தான் கட்சியில் இணைந்துள்ளார். கட்சியின் செயலியில் இவர் அளித்த புகார் தான் செய்தியானது. அதன் பிறகே இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    Next Story
    ×