search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் வெற்றி பெறுவேன்- திருமாவளவன்
    X

    சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் வெற்றி பெறுவேன்- திருமாவளவன்

    பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு கட்டாயம் வெற்றி பெறுவேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #LSPolls #Thirumavalavan
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேள்வி:- உங்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்காமல் பானை சின்னம் ஒதுக்கியது ஏன்?

    பதில்:- மோதிரம் சின்னம் கேட்டுதான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருந்தோம். தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் போட்டியிடும் எங்களுக்கு ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 18-ந்தேதி மனு செய்தோம்.

    நாங்கள் கேட்ட மோதிரம் சின்னம் வேறு ஒரு புதிய கட்சிக்கு ஒதுக்கி விட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    2011, 2014, 2016 ஆகிய 3 பொதுத்தேர்தல்களிலும் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். அதன் அடிப்படையில் மோதிரம் சின்னம் கோரினோம். எங்களுக்குதான் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். ஆனால் புதிய ஒரு கட்சிக்கு அதை ஒதுக்கி விட்டார்கள்.

    பின்னர் வைரம், பலாப்பழம், மேஜை மற்றும் பானை ஆகிய சின்னங்களை கேட்டோம். கடைசியாக பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பானை சின்னம் கொடுக்காமல் ‘ஸ்டூல்’ சின்னம் ஒதுக்கியுள்ளனர்.

    முதன் முதலாக 6 பாராளுமன்ற தொகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்.

    கேரளா, கர்நாடகாவில் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். சிதம்பரத்தில் போட்டியிடும் நான் பானை சின்னத்தில் கட்டாயம் வெற்றி பெறுவேன்.

    கேள்வி:- உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி தி.மு.க. உங்களை நிர்ப்பந்தம் செய்ததா?

    பதில்:- தி.மு.க. தரப்பில் இருந்து அப்படி எந்த நிர்பந்தமும் இல்லை. உதய சூரியன் சின்னத்தில் 2 தொகுதிகளிலும் கட்டாயம் வெற்றி பெற முடியும் என்று கருதி அப்படி ஆலோசனையை சொன்னார்கள். ஆனால் வெற்றி வாய்ப்பை மட்டுமே கருத்தில் கொண்டு சிதம்பரத்தில் தனி சின்னத்திலும், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு எடுத்தோம்.

    இந்த 2 தொகுதிகளிலும் நாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம். தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    கேள்வி:- பானை சின்னம் மக்களுக்கு வெகுவாக போய் சேருமா?

    பதில்:- மக்களுக்கு வெகுவாக போய் சேரும். இதில் எந்த சிக்கலும் இருக்காது.

    கேள்வி:- தினகரன், கமல், சீமான் போன்றவர்கள் தனித்து நிற்பதால் உங்கள் கூட்டணி வெற்றி பாதிக்குமா?



    பதில்:- தினகரன் அணியினர் பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க.வுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். அது எங்கள் கூட்டணிக்கு சாதகமாகவே அமையும்.

    கேள்வி:- 18 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தல் பற்றி?

    பதில்:- சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அ.தி.மு.க.வுக்கு வாழ்வா? சாவா? என்கிற பிரச்சனை. தி.மு.க.வை பொறுத்தவரையில் சட்டமன்றம், பாராளுமன்றம் இரு தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜனதா அணியை வீழ்த்தியே தீர வேண்டும் என்கிற வேகத்துடன் செயல் திட்டங்களை வரையறுத்துள்ளோம். இரண்டிலும் தி.மு.க. அணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thirumavalavan
    Next Story
    ×