search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் இடி-மின்னலுடன் பலத்த மழை: வாழை மரங்கள் சாய்ந்தது
    X

    புதுவையில் இடி-மின்னலுடன் பலத்த மழை: வாழை மரங்கள் சாய்ந்தது

    புதுவையில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறை காற்றினால் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது.

    புதுச்சேரி:

    கோடை காலம் தொடங்கிய மார்ச் மாதம் முதல் புதுவையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்தது. காலை முதல் மாலை வரையிலும் வெயிலின் உக்கிரத்தால் சாலையில் நடமாட முடியாத நிலை இருந்தது.

    இரவிலும், வெப்பத்தின் தாக்கம் நீடித்தது. இதனால் புதுவை மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வீட்டை விட்டே வெளியே வர முடியாத நிலை நீடித்தது.

    இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை “பானி” புயலாக உருவெடுத்தது. தமிழகம் மற்றும் புதுவையில் புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    புயலால் புதுவையில் மழை பெய்யும், வெயிலின் உக்கிரம் சற்று குறையும் என பொதுமக்கள் எதிர் பார்த்தனர். ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது.

    “பானி” புயல் திசை மாறியதாக வானியை ஆய்வு மையம் அறிவித்தது. அதோடு, தமிழகம், புதுவையில் புயலால் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் புயல் நாளை (வெள்ளிக்கிழமை) ஒடிசா கடற்கரையில் கரையை கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    புயலால் வானிலை மாறி சற்று குளிர்ந்த காற்றும், மழையும் பெய்யும் என எதிர் பார்த்த புதுவை மக்களுக்கு வானிலை மாற்றம் ஏமாற்றத்தை அளித்தது. தொடர்ந்து வெயிலின் ஆதிக்கமே நீடித்தது.

    இருப்பினும், புயல் தெற்கு ஆந்திர கடற்கரையை நெருங்கும் போது தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டது. இது புதுவை மக்களுக்கு ஆறுதலை அளித்தது.

    நேற்று பகல் பொழுதில் வெயிலின் உக்கிரம் அதிக மாகவே இருந்தது. இந்த நிலையில் மாலை 6 மணியளவில் நிலைமை ‘திடீரென’ மாறியது.

    வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. குளிர்ந்த காற்றுடன் ‘திடீர்’ மழை பெய்தது. மழையுடன் மேகம் கூடி இடி- மின்னலுடன் மழை பெய்தது.

    மழையுடன் பலத்த சூறை காற்று வீசியது. சூறை காற்றினால் நகர பகுதியில் சாலையோர கடைகளில் இருந்த விளம்பர பலகைகள், தட்டி-போர்டுகள் பறந்தன. மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. இதே போல் புதுவை நகரை அடுத்துள்ள வில்லியனூர், திருக்கனூர், ஏம்பலம், திருபுவனை, மடுகரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் சூறை காற்றுடன் மழை பெய்தது. இடி-மின்னலுடன் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது.

    இதனால், புதுவை நகரம் மட்டுமல்லாது, புற நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புதுவை இருளில் மூழ்கியது.

    சூறை காற்றினால் புதுவையில் கிராமப்புற பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன.

    திருக்கனூர், கூனிச்சம்பட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 25 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தது. ரூ.50 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளது.

    நெட்டப்பாக்கத்தை அடுத்த பண்ட சோழநல்லூர் பகுதியில் வீசிய சூறை காற்றில் வடுக்குப்பம் ஏரிக்கரை சாலையில் உள்ள பனைமரம் ஒன்று திடீரென்று முறிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற பண்ட சோழநல்லூர் வாலிபர்கள் ஹரிகரன், திருநாவுக்கரசு, பிரகாஷ் ஆகியோர் மீது பனைமரம் விழுந்து அமுக்கியது.

    இதில் அவர்கள் 3 பேரும் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுவை ஆனந்தா நகரில் ஆல மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில், அங்கு நிறுத்தி வைத்திருந்த 2 கார்கள் சேத மடைந்தன. காந்தி திருநல்லூர் பகுதியில் ஒரு மரம் வேறோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.

    காந்தி நகர் பகுதியில் மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்தவுடன் கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விரைந்து சென்று சாய்ந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    புதுவையையொட்டிய தமிழக பகுதிகளான வானூர், கண்டமங்கலம், மரக்காணம் பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழை காரணமாக புதுவையில் சற்றுவானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை முதலே வெயிலின் உக்கிரம் குறைந்துள்ளது.

    Next Story
    ×