search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை
    X

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக வெயில் சுட்டெரித்து வந்தது. கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வந்தனர். மேலும் நீர் நிலைகள் வறண்டு போகத் தொடங்கின.

    மேலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குடிநீருக்காக பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டங்களில் ஈடுபடும் அளவுக்கு வறட்சி தாண்டவம் ஆடியது. எனவே பொதுமக்கள் மழை எப்போது பெய்யும் என வானத்தை வெறித்து பார்த்த படி இருந்தனர்.

    தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை கொட்டத் தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதனால் முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி வராக நதி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. பெரியகுளம், தேனி, கம்பம், கூடலூர், தேவாரம், போடி, ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது.

    நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 7 மணி முதல் சாரல் மழை பெய்தது. செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 2 மாதமாக வறட்சி அதிகரித்ததால் பூ சாகுபடி குறைந்தது.

    இந்த நிலையில் தற்போது மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மழை காரணமாக செம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் வருவதும், தடைபடுவதும் என தொடர்ந்து இருந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

    இதே போல் மாவட்டத்தில் பழனி, கொடைக்கானல், நத்தம், வத்தலக்குண்டு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுட்டெரித்த கொடைக்கானலில் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கள்ளழகர் வைகை ஆற்றியில் இறங்கிய முதல் நாளே மழை பெய்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கியதால் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×